தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் இன்று காலை மஞ்சள்காமாலை காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 41.அவரது உடலுக்கு திரையுலகினர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் முத்துகுமாரின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நா.முத்துக்குமார். திரைப்பட இயக்குநராக வேண்டும் என்றஆசையில் இயக்குனர்,ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவிடம் ஆரம்பநாட்களில் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார்.
‘காதல் கொண்டேன்’, ‘பிதாமகன்’, ‘கில்லி’, ‘கஜினி’, ‘நந்தா’, ‘புதுப்பேட்டை’, ‘காதல்’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘கற்றது தமிழ்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘காக்காமுட்டை’, ‘தெறி’ உள்ளிட்ட பல படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடலகள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.
தமிழ் சினிமாவில் 92க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ‘தங்கமீன்கள்’ படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும், ‘சைவம்’ படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நா.முத்துக்குமார் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நா.முத்துக்குமார் இன்று காலை உயிரிழந்தார்.
நா.முத்துக்குமாருக்கு தீபலஷ்மி என்ற மனைவியும், ஆதவன் (9) என்ற மகனும், யோகலட்சுமி என்ற 8 மாதமே ஆன கைக்குழந்தை உள்ளனர்.னா.முத்துகுமாரின் உடல் தகனம் இன்று மாலைநியு ஆவடி ரோட்டில் உள்ள சுடுகாட்டில் உடல் தகனம் நடக்கிறது.