“கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து”என தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடியவர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை.
தமிழ்த்தாயின் உதிரத்தில் உதித்த பிள்ளையாம் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்திருக்கிற படம்தான் ‘காந்தாரா’ .துளுவும் படத்தில் பாடப்பெற்றுள்ளது .
வணிக ரீதியாக கன்னடத்தில் வெற்றி கண்டுள்ள படம் தமிழாகவும் வந்திருக்கிறது.
கதை என்ன?
மன்னராட்சி காலத்தில் குடிமக்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலங்களை மன்னனின் வாரிசுகள் திரும்ப கொடுத்துவிடும்படி வலியுறுத்த ,அதற்கு எதிராக மக்கள் போராடுவதுதான் கதை! ‘எங்ரோச்மெண்ட் ‘என சொல்லி வனத்துறையும் மக்களுக்கு குடைச்சல் கொடுக்கிறது.
மக்களா ,மன்னனின் வாரிசா,வெற்றி யாருக்கு என்பதை கிராம தெய்வ வழிபாட்டினை வைத்து சொல்லியிருக்கிறார்கள்.
‘காந்தாரா’ எழுதி இயக்கி நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி .
மக்களை எளிதாக சென்றடையும் கேரக்டர் .எருமை போட்டிகள்,பன்றி வேட்டைகளில் கலந்து கொள்கிற மது பிரியன். ஏழையாக இருந்தாலும் வீரன். நண்பர்கள் நிறைய …இப்படியொரு கிராமவாசியாக வாழ்கிற ரிஷப் ஷெட்டி ஏழை மக்களுக்காக நில மீட்பு போராட்டத்தில் தளபதியாக உரு மாறுகிறார்.மிரள வைக்கிறார்.அதுவும் அவர் மீது சாமி வந்ததும் வோம்..வோம் என ஒங்காரமிடுவது சூப்பர்.!
வனத்துறையில் வேலை பார்க்க வேண்டும் என்பது கனவு .இது கை வசப்பட்டும் தன்னுடைய நிலத்தை பறிக்கிறது வனத்துறை .இதையும் மீட்க வேண்டும் காதலனையும் சேர வேண்டும் என்கிற போராட்டம் .சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகி சப்தமி கவுடா.
கேரக்டர் ரோல் என்றால் கிஷோருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. வனத்துறை அதிகாரியாக மிரட்டினாலும் மக்களுக்கு ஆதரவாக திரும்புகிறார். சிறந்த நடிப்பு.!
அச்யுத் குமார் .வெள்ளை வேட்டி சட்டை அழுக்குப்படாமல் அராஜகம் செய்கிற மன்னர் வாரிசு.செம ஆக்டிங் .!
அஜனீஷ் லோகநாத் இசை,பின்னணி இரண்டும் கதையின் காலஓட்டத்துக்கு இசைவாக இருக்கிறது.
இந்த படத்தின் வெற்றிக்கு ஒளிப்பதிவும் காரணம்.அரவிந்த் காஷ்யப் கிராமிய வழி பாட்டு காட் சிகளை மெய் சிலிர்க்க படமாக்கியிருக்கிறார்.கிராமிய தெய்வ வழிபாடுகளில் துளு பேசப்படுகிறது.தொடக்கத்தில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையை நினைவு படுத்தியது இதற்காகவே!
பார்க்கலாம் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.!
மார்க் 3 /5
********************