
கும்பகோணத்தில் கட்டப் பஞ்சாயத்து ,அடிதடி,கொலை என வலம் வரும் பெரிய தாதா (சரத் லோகிதஷ்வா). நாகா. இவருடைய அடியாள் ‘பிளேடு’ ஜீவா. அனாதை. நாகாவுக்காக எதையும் செய்வார்.
நாகாவும், ஜோ மல்லூரியும் சாக்கு மண்டியில் பிசினஸ் பார்ட்னர்கள்.ஜோ மல்லூரியின் மகள் வித்யா என்னும் நயன்தாரா. இதற்கிடையே ஒரு பிரச்சனையில் நயன்தாரா- ஜீவா இடையே காதல் வந்து விடுகிறது. இவ்விவகாரத்தில், சரத்திற்கும், ஜோ மல்லூரிக்கும் இடையே விரிசல் விழ, சரத், பண விவகாரத்தில் ஜோ மல்லூரியை ஏமாற்றியதோடுபோட்ட முதலீட்டைக் கூட தராமல்,மிரட்டி துரத்தி விடுகிறார்.இதனால் நண்பருக்கு துரோகம் செய்த சரத்திடம் இருந்து விலகி, ஜோ மல்லூரியிடம் தஞ்சமடைவதோடு அவருக்கு பக்க பலமாக நிற்கிறார் ஜீவா.இதனால் ஆத்திரமடைந்த நாகா, இவர்களை அழித்துவிடும் நோக்கில் சுற்றிவர, அனாதையான ஜீவாவுக்கு, நயன்தாரா குடும்பம் காட்டும் அன்பினால்,தனக்கென கிடைத்த உறவுகளை தக்க வைத்து கொண்டு ”ரவுடியிசம் போதும்” என நயன்தாராவோடு அமைதியாய் குடும்பம் நடத்த ஆசைப்படுகிறார் ஜீவா. இதற்கிடையே பிளேடு ஜீவா,நாகா இருவரையும் ஒழித்துக்கட்டி தாதாயிசத்திற்கு முடிவு கட்ட நினைக்கிறது போலீஸ்.இதற்காக எஸ்.பி.கோபிநாத் தலைமையிலான என்கவுண்டர் டீமை நியமிக்கிறது. இந்த பரமபத விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்கள்,ஜீவா நயன்தாரா கல்யாணம் நடந்ததா,இல்லையா!,நாகா,பிளேடு கதை என்னவாகிறது என்பதுதான் மீதிக்கதை!

அழுக்கு லுங்கி,சட்டை, வாரப்படாத தலை,வாயில் பிளேடு என ரவுடி கெட்டப் ஜீவாவுக்கு மிக நன்றாகவே பொருந்திப் போகிறது. முதல்பாதியில் முறைப்பு, மிடுக்கு,என கோயில் காளையாய் திரியும் ஜீவா, பிற்பாதியில்,தனக்கென கிடைத்த உறவுகளை எங்கே இழந்து விடுவோமோ என, ”எனக்கு எதுவும் வேணாம். என்னை விட்டுடுங்க’ என அப்படியே பதுங்குவது என நடிப்பில் அசத்தி விடுகிறார். அழகான பாவாடை தாவணியில் வலம் வரும் நயன்தாரா.பளீச்!மற்றபடி மாங்காய் திருடுவது, மரத்தைச் சுற்றி ஆடுவது, ஹீரோவை நினைத்து சோகமாக பாடுவது என வழக்கமான கதாநாயகிகள் செய்யும் வேலையே இவருக்கு! படத்தில் நயனுக்கு கிடைக்கும் பலத்த கைதட்டல், ஜீவாவுடன் நயனின் லிப்-லாக் காட்சி இளசுகளை சூடேற்றுகிறது.மற்றபடி வழக்கமான கதை என்பதால் ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கிறது.கருணாஸ், வ.ஐ.ச ஜெயபாலன், சுஜாதா, மீனாக்ஷி, முனிஸ்காந்த் ராமதாஸ் என அனைவரும் அவரவர் வேலையை செய்துள்ளனர்.மகேஷ் முத்துஸ்வாமியின் ஒளிப்பதிவு,கண்களுக்குள் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது.ஸ்ரீகாந்த்தேவா வழக்கமான பாணியை விட்டு, இமான் பாணியில்,(கேட்ட ராகமாயிருந்தாலும்) மெலடி பாடல்களில் தலையாட்ட வைக்கிறார்.மொத்தத்தில் புதிய மொந்தையில் பழைய கள் !