காசிக்குப் போனால் பாவம் தொலையும் என்கிற பாமரத்தன்மையான நம்பிக்கை இந்த நாட்டில் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது.
அந்த காசியில் ஒரு அழகான காதல் கதையும் இருக்கிறது என்பதை இந்த பனாரசில் பார்க்க முடிந்தது. ‘டைம் லூப் ‘வகை கலந்து கட்டியிருக்கிற கதை.
நாயகனும் நாயகியும் அழகாக இருக்கிறார்கள்.இளமையுடன் இருக்கிறார்கள் என்பது கதைக்கு வலிமை. முதிர்ந்த மூஞ்சிகளைப் பார்த்து சலித்துப்போன கண்களுக்கு உற்சாக பானம் !!
நாயகன் ஜாயித் கான்.கர்நாடக எம்.எல்.ஏ .யின் மகனாம்.அறிமுக நடிகர் போலில்லாமல் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். பிற்பாதியில் குழப்பம் அடைந்து ஓடி ,தேடி அலைவது காதலின் உயர்வு.!
சோனல் மாண்ட்ரியா சொக்க வைக்கிற அழகி .பார்த்துக்கொண்டே இருக்கலாம்.கண்களில் அப்படி ஒரு ஈர்ப்பு சக்தி.சட்டென்று ‘ஐ லவ் யூ ‘சொல்கிற காட்சி நம்மைப்பார்த்து சொல்லக்கூடாத என ஏங்க வைக்கிறது.
காசியை பார்த்திராதவர்களுக்கு சந்து சந்தாக கூட்டிச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் குருமூர்த்தி. புகை மண்டலமாக பனிப்படலம் கவிந்து கிடக்கிற காட்சியை நேர்த்தியுடன் படமாக்கியிருக்கிறார். நல்ல வேலை எரியும் சடலங்களை அவர் காட்சிப் படுத்தவில்லை.
கட முடா பாடல்களை கேட்டு செத்துப்போயிருக்கிற செவிகளை உயிர்ப்பித்திருக்கிறது பழனி பாரதியின் வரிகள்.அஜனீஷ் லோக் நாத் என்பவர் இசை இதம்.
இயக்குநர் ஜெயதீர்த்தா நன்றாக கதை சொல்லியிருக்கிறார் .டைம் டிராவலில் குழப்பி அடித்திருக்கிறார்.
காசிக்குப்போனேன் சந்நியாசி ஆனேன் என்றில்லாமல் காசியின் அழகினை கண்டு களிக்க நல்ல வாய்ப்பு. சின்ன சின்ன சந்துகளும் ,கஞ்சா புகைக்கும் சாமியார்களும் ,கடவுள் வேடம் புனைந்து காசு வாங்கும் ஏழ்மையும் காசிக்கு அழகு. சிறந்த சுற்றுப்பயணமாக அமைந்திருக்கிறது பனாரஸ்.