டிஜிட்டல் தலைமுறையினரின் காதலை, இயக்குனர் சுந்தர் சி தனது திரைக்கதை பாணியில் சொல்லியிருக்கும் படமே ‘காபி வித் காதல்’. அவரது எல்லாப்படங்களிலுமே ரசிகர்களை கவரும் மேஜிக் இருக்கும்.. அது இந்தப்படத்திலும் இருக்கிறதா? பார்க்கலாம்!
பிரதாப் போத்தனின் பிள்ளைகளான ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், திவ்யதர்ஷினி (டிடி) 4 பேரும் உடன் பிறந்தவர்கள். இவர்களில் ஸ்ரீகாந்த், திவ்யதர்ஷினி ஆகியோருக்கு மட்டுமே திருமணம் நடந்துள்ளது. திவ்யதர்ஷினி, சகோதரர்களுக்குள் நடக்கும் மோதல்களை முன்னின்று தீர்த்து வைப்பவர்.
திருமணமான ஸ்ரீகாந்த் , ரைசா வில்சனுடன் தொடர்பிலிருக்கிறார். ஜெய்யை ஒரு தலையாக காதலிக்கிறார் அமிர்தா. ஜீவா, ஐஸ்வர்யா தத்தா டேட்டிங் செய்யும் இவர்கள், விரைவில் திருமணம் கொள்ள முடிவு செய்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து வரும் குடும்ப நண்பரின் மகள் மாளவிகா சர்மாவுக்கும் ஜெய்யுக்கும் நிச்சயம் செய்யப்படுகிறது. மளவிகா சர்மாவோ ஜீவாவை விரும்புகிறார். ஜீவாவின் பெற்றோர் ஸ்ரீகாந்த்துடன் தொடர்பிலிருக்கும் ரைசாவில்சனை ஜீவாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். என்ன…? கதை, கேட்கும் போது குழப்பமாக இருக்கிறதா? ஆனால், படம் பார்க்கும் போது ஜாலியாக இருக்கும்!
சுந்தர்.சி-யின் ஒவ்வொரு படங்களிலுமே ஏகப்பட்ட நடிகர்கள் இடம்பெறுவார்கள். அதேபோல் இந்த காஃபி வித் காதல் படத்திலும் இருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகர்களையும் அவரவர்களுக்கு ஏற்றார் போல் பயன்படுத்தி இருக்கிறார்.
ஜீவா – ரைசா வில்சன் இவர்களது திருமணத்தை நிறுத்த பாடுபடும் ஸ்ரீகாந்த்தின் பரிதாபமான நடிப்பு, அனைவரையும் ரசிக்கும் படி செய்யும். அதேபோல் ரைசா வில்சனுடன் ஆட்டம்போடும் இடத்திலும் ஜோராக நடித்திருக்கிறார். அவ்வப்போது தனது மனைவி சம்யுக்தாவிடம் மாட்டும்போதும் சிறப்பாக நடித்திருக்கிறார்..
ஜீவா, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். தம்பி ஜெய்யுக்கு நிச்சயிக்கப்பட்ட மாளவிகா சர்மாவின் மேல் அவருக்கு காதல் வரும் நிலையில், அதிலிருந்து விலகும்போது சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார்.
ஜெய், ஜாலியாக வலம் வருகிறார். அவரது காதலை உணரும் தருணத்திலும் ஜீவாவுடன் சண்டையிடும் காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மாளவிகா சர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். ரைசா வில்சன், கவர்ச்சியில் தாரளம் காட்டியிருக்கிறார்.
இந்தப்படத்தில் சர்ப்ரைஸ் கொடுத்திருப்பவர் திவ்யதர்ஷினி (டிடி) தான். சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.
யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி இருவரின் காமெடி காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே! ஒளிப்பதிவாளர் ஈ.கிருஷ்ணசாமியின் காட்சிகள் கலர்ஃபுல்!
தனது ஒவ்வொரு படத்தின் இறுதியிலும் காமெடி தர்பார் நடத்தி வெடிச்சிரிப்பினை ஏற்படுத்துவார் சுந்தர் சி. அது இந்தப்படத்தில் மிஸ்ஸிங்!
‘காபி வித் காதல்’ இளமை துள்ளும் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ்!