பரத், வாணி போஜன் இணைந்து நடித்திருக்க அவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், ராஜ் குமார், சிறுவன் அங்கித் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியுள்ள படம், மிரள். அறிமுக இயக்குனர் M.சக்திவேல் எழுதி இயக்கியிருக்கிறார்.
‘ஆக்சிஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ள மிரள் படத்தினை, ‘சக்தி பிலிம் பேக்டரி’ சார்பில் சக்திவேலன் வெளியிட்டுள்ளார். எப்படி இருக்கிறது? மிரள்?
படம் ஆரம்பித்த சில காட்சிகளிலேயே மிரட்டத்துவங்கும் படம், கடைசி வரை மிரட்டுகிறது. பரத்தின் மனைவி வாணி போஜனுக்கு அவ்வப்போது ஒரு அமானுஷ்யமான நிகழ்வு ஏற்படுகிறது. அது அவரை நிலைகுலையச் செய்கிறது. அத்துடன் பரத்தை ஒரு முகமுடி அணிந்த மர்ம உருவம் கொலை செய்வதைப் போல் கனவும் வருகிறது. இதனால் அவர்கள் தங்களது பூர்வீக கோவிலுக்கு சென்று குல தெய்வத்தை வழிபட முடிவு செய்கின்றனர். இதன் பிறகு நடக்கும் திக்.. திக்.. நிமிடங்கள் தான் மிரள் படத்தின் மொத்த கதையும்.
சிறந்த நடிகர் என்பதை பல படங்கள் மூலம் நிரூபித்த நடிகர் பரத், இந்த படத்திலும் குறை சொல்ல முடியாத படி நடித்துள்ளார். அவரை விட வாணிபோஜனுக்கு சற்று கடினமான கதாபாத்திரம் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பும் கூட, நன்றாகவே நடித்திருக்கிறார். ஆபாச வீடியோவை பார்த்து குமுறும் காட்சியிலும், க்ளைமாக்ஸில் அவர் ஆசிட் ஊற்றும் காட்சியிலும் சிறப்பான நடிப்பு! சிறுவன் ராம் கீத்தும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
பரத், குடும்பத்தினருடன் குல தெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு காரில் திரும்பும் வழியில், நடுகாட்டில் அவர்கள் சிக்கி திணறும் போது படம் பார்ப்பவர்களும் சேர்ந்தே திணறுகிறார்கள்.
ஒளிப்பதிவும், இசையும் படத்தின் திக்.. திக்.. காட்சிகளை மேலும் மேம்படுத்துகின்றன.
எடிட்டர் கலைவாணன், சில காட்சிகளில் அஜாக்கிரதை காட்டியிருக்கிறார். எடுத்துகாட்டாக பரத்தின் குடும்பம் காட்டின் நடுவே சிக்கி கொள்ளும் காட்சியை சொல்லலாம்.
டேன்ஜர் மணியின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
லாஜிக் மீறல்கள் மற்றும் குழப்பமான சில காட்சிகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் ‘மிரள்’ மிரள வைக்கிறது.
‘மிரள்’, திகில் பட பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!