சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், சம்பத் ராஜ், சத்ரு, முரளி சர்மா, ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், யசோதா. ‘அம்புலி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஹரி – ஹரிஷ் இரட்டை இயக்குனர்கள் கதை எழுதி, இயக்கியிருக்கிறார்கள். சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ‘ஸ்ரீதேவி மூவிஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் மாடல் அழகி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அதேபோல் ஒரு புகழ்பெற்ற தொழிலதிபரும் இறந்து போகிறார். போலீஸின் விசாரணையில் இந்த இருவரும் ஒரே முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிய வருகிறது. யார் அந்த கொலையாளிகள். எதற்காக அவர்கள் கொல்லப்பட்டார்கள்? என்பதை கண்டுபிடிக்க சம்பத்ராஜ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. அவர்கள் கண்டுபிடித்தார்களா?
சமந்தா, தனது தங்கையின் மருத்துவச் செலவுக்காக தேவைப்படும் பெருந்தொகைக்காக, வாடகைத் தாயாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்மதிக்கிறார். அதனால், வரலக்ஷ்மி சரத்குமாரால் நடத்தப்படும் சகல மருத்துவ வசதிகள் கொண்ட ஒரு இடத்தில் தங்கவைக்கப்படுகிறார். அங்கே மர்மமான சில நிகழ்வுகள் நடைபெறுகின்றது. அதை கண்டுபிடிக்க சமந்தா முயல்கிறார். இது வரலக்ஷ்மி சரத்குமாருக்கு தெரிய வருகிறது. எனவே அவரை கொலை செய்ய முடிவு செய்கிறார். சமந்தா கொல்லப்பட்டாரா? இல்லையா?
இந்த இரண்டு சம்வங்களுக்குமான பதிலே ‘யசோதா’ படத்தின் சுவாரஷ்யமான திரைக்கதை!
கதாநாயகிகளை முன்னிறுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், ‘யசோதா’ தனிக்கவனம் பெறுகிறது. இந்தப்படத்தை தேர்ந்தெடுத்த சமந்தாவை பாராட்டலாம். நடிப்பதற்கும், அடிதடி காட்சிகளில் தூள் கிளப்புவதற்கும் அவருக்கு காட்சிகள் கிடைத்திருக்கிறது. எல்லாக்காட்சிளிலுமே தன்னுடைய தனித்துவமான பங்கினை கொடுத்திருக்கிறார். அவரது ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.
அடுத்தாக வரலக்ஷ்மி சரத்குமார், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சில இடங்களில் அவர் காட்டும் மிடுக்கன நடை, அசத்தலாக இருக்கிறது.
உன்னி முகுந்தன், அப்பாவித் தனத்தையும் ஆக்ரோஷத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சம்பத் ராஜ், சத்ரு, முரளி சர்மா உள்ளிட்ட பிற கலைஞர்களும், கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பினை கொடுத்துள்ளனர்.
யசோதா, சில ஆங்கிலப் படங்களை நினைவு படுத்தினாலும், கதை, திரைக்கதை ரசிகர்களை திருப்தி படுத்துகிறது. படம் ஆரம்பித்த சில காட்சிகள் சற்று சுவாரஷ்யமற்று சென்றாலும், அதன்பிறகு வேகமெடுக்கும் திரைக்கதை அடுத்தது என்ன? என, பார்வையாளர்களை பர பரக்க வைக்கிறது. கொலைகளுக்கான காரணத்தினையும், வாடகைத்தாய் சம்பவத்தினையும் சரியாக இணைக்கும் திரைக்கதையின் எதிர்பாராத டிவிஸ்டும், க்ளைமாக்ஸூம் இரட்டை இயக்குனர்கள் ஹரி – ஹரிஷுக்கு சபாஷ் போடவைக்கிறது. சமந்தாவின் ஃபிளாஷ் பேக் காட்சிகள் சற்றே குழப்பம் ஏற்படுத்துவதை, தவிர்த்திருக்கலாம்.
பின்னணி இசை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப விஷயங்களில் யசோதா பலமாகவே இருக்கிறது.
லாஜிக்கலா, சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் போரடிக்காத ஒரு விறு விறுப்பான படமாக ‘யசோதா’ உருவாக்கப்பட்டுள்ளது.