அசிங்கமான காட்சிகள் இல்லாமல் குழந்தைகளை குதூகலப்படுத்த எடுக்கப்பட்டிருக்கிற சாகசப் பயணப்படம்.பொதிகை மலைப்பகுதியில் இருக்கிற மூதாதையர் சேமித்த புதையலுக்கு ரூட் கிடைக்கிறது
செஞ்சியில்..இங்கிருந்து தொடங்கும் பயணம் ஐந்து தடயங்களை வைத்து போய்ச்சேருகிறது .புதையலை எடுத்தார்களா ,ஏமாந்தார்களா என்பதை அருமையான லொக்கேஷன்கள் படப்பிடிப்பு என்று கஷ்டப்பட்டு காட்டியிருக்கிறார்கள்.
மூதாதையர் இல்லம் தேடி புதுச்சேரி வருகிற இளம் பெண் சோபியாவுக்கு விசித்திரமான மர்மங்களை உணர்த்துகிறது அந்த பிரஞ்சு வீடு.ஓலைச் சுவடி யை எடுத்துக்கொண்டு ஜாக் ஆண்டர்சனை நாடுகிறாள். அவர் தோல் பொருள் ஆராய்ச்சியாளர் .இவரது “வாவ்” படத்தின் கவர்ச்சி .!
செஞ்சியில் புதையல் இருப்பதாக ஓலைச்சுவடி காட்ட மூவர் குழு புறப்படுகிறது. வழிப்பயணமும் .இயற்கையழகும் நம் நாட்டின் சிதைக்கப்படாத ஏரியாக்களைக் காட்டுகிறது .இதற்கு தொடர்பில்லாத வகையில் தொங்கு சதையாக ஐந்து சிறுவர்கள் கிராமத்திலிருந்து புறப்படுகிறார்கள். சேட்டைகளால் வெறுத்துப்போன பெற்றோர்களினால் ஓடிப்போகிறவர்கள்.
இவர்கள் ஐவரும் ஒரே நட்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் என்பதால் அந்த புதையல் இவர்களுக்குத்தான் கிடைக்கிறது,குகைக்குள் மாட்டிக்கொண்ட இவர்களை ஜாக் ஆண்டர்சன் குழு கண்டு பிடித்து காப்பாற்றி புதையலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்கள்.
அடர்ந்த காடு என்பதால் தீவிரவாதிகள் இல்லாமலா? அந்த சோத்துப்பிண்டங்களையும் இந்த புதையல் குரூப்தான் கண்டு பிடிக்கிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இயக்குநர் கணேஷ் சந்திரசேகர் நடித்துள்ளார். அவர் இன்னமும் தேறிவர வேண்டும்.ஒரே நேரத்தில் சில காட்சிகளில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனம் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.
வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலேயப் பெண்மணியாக ரஷ்ய நடிகை கெசன்யா நடித்துள்ளார்.
சுட்டித்தனம் செய்யும் அந்த ஐந்து சிறுவர்களாக மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன் ,மாஸ்டர் தர்சன் குமார், மாஸ்டர் விதேஷ் ஆனந்த், மாஸ்டர் சஞ்சய், பேபி தீக்ஷன்யா அச்சமின்றி நடித்திருக்கிறார்கள். லூட்டிகள் சம்பந்தப்பட்ட நீளமான காட்சிகளுக்கு சற்றுக் கத்திரி போட்டிருக்கலாம்.
நமது பழங்கால வரலாற்று உணர்வை வரவழைக்கும் முயற்சி!