கே.ஜி.எஃப்-1,2, காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரித்து வரும் புதிய படம், ‘ரகு தாத்தா’-
ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்து கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து,உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எம் எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, யாமினி யக்ஞ மூர்த்தி ஒளிப்பதிவில், ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் மூலம் ‘பேமிலி மேன்’ வெப் தொடரின் எழுத்தாளர் சுமன் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது – ‘ரகு தாத்தா நகைச்சுவை பட மட்டுமின்றி, தைரியமிக்க, துணிச்சலான பெண் தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தில் தன் தனித்துவத்தை கண்டுகொள்ளும் களமானது, மற்றவர்களுக்கும் ஓர் உத்வேகமாக திகழும். நாயகி எதிர்கொள்ளும் சவால்கள் அவரின் அடையாளத்தை எவ்வாறு வெளிக்கொணர்கிறது என்பதை நகைச்சுவை கலந்து, குடும்பத்தில் உள்ள அனைவரையும் ரசித்து சிரிக்க வைக்கும் படி இருக்கும் என்றவர் மேலும் கூறுகையில், ஹோம்பாலே பிலிம்ஸ் வருமாண்டில் மேலும் 4 பிரமாண்ட படைப்புகளை வெளியிட தயாராக உள்ளது. பிரபாஸுடன் ‘சலார்’, செப்டம்பர் 2023, பாஹத் பாஸிலுடன் ‘தூமம்’, ஸ்ரீமுரளியுடன் ‘பகிரா’ 2023 இறுதிக்குள். இதை தவிர்த்து, மேலும் ஒரு பான் இந்திய திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவிருக்கிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் வரவிருக்கும் இரு ஆண்டுகளில் 14 திரைப்படங்களை வெளியிட உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் கனவிலும் நினைக்க முடியாத திட்டமிது என்கிறார்.