
ஒரு படத்தை மூன்று பாகமாக பிரித்துக்கொண்டு அதில் நடுப்பாகத்தை முதலில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இது முதல் முயற்சியாம்.
இது எந்த அளவுக்கு உதவும் என்பது தெரியவில்லை. பிராஜெக்ட் சி.பாகம்.2 படத்தில் முக்கியமாக மூவர் இருக்கிறார்கள். அறிமுக நாயகன் ஸ்ரீ விஞ்ஞானியாக வருகிறார்.வீட்டு வேலைக்காரம்மாவாக வசுதா கிருஷ்ணமூர்த்தி. பிசியோதெரபிஸ்ட் சாம்ஸ். படுத்த படுக்கையில் ஒரு கிழம் ராம்ஜி .
வேலை கிடைக்காத விஞ்ஞானி ஸ்ரீ படுக்கையில் கிடக்கும் ராம்ஜியை ( இவரும் அறிவாளி விஞ்ஞானிதான்.) பார்த்துக்கொள்கிற வேலையில் அமர்கிறார். வீட்டு வேலைக்காரிக்கு வேறு எதிலோ நாட்டம் என்பது தெரிகிறது. பிசியோதெரபிஸ்ட் சாம்ஸ்க்கும் அந்த வீட்டில் இருக்கிற மருத்துவ பார்முலாவை ஆட்டையைப்போட ஆசை. வேலைக்காரிக்கு பணத்தின் மேல் ஆசை.போட்டுத்தள்ளக்கூட தயார். ராம்ஜி கண்டுபிடித்த மருந்துகள் வழியாக ஸ்ரீ கொள்ளை கொள்ளையாக சம்பாதிக்கிறார்.இப்படி கொண்டு போகிற கதையில் வேலைக்காரிக்கு வெற்றியா,அல்லது மற்ற இருவர்க்கும் வெற்றியா ?
எதிர்பார்ப்புடன்தான் கதை நகர்கிறது.
ஸ்ரீ யின் நடிப்பு கதையின் நகர்வுக்கு ஏற்ப மெருகேறுகிறது. வேலைக்காரி உடலழகினைக்காட்டி ( ? )நாயகனைக் கவர பார்ப்பதும் மிரட்டுவதும் ஓகே.சாம்ஸ் வழக்கம்போல. படுத்துக்கொண்டே நடிக்கிறார் ராம்ஜி. பெரும்பாலும் நீதிபதியாக பார்த்தே பழக்கப்பட்ட முகம்.
இசையமைப்பாளர் சிபு சுகுமாரன் இசை இயல்பாக அமைந்திருக்கிறது.
சதிஷ் ஆனந்தின் ஒளிப்பதிவு சிறப்பு.
இந்தப்படத்துக்கு படத்தொகுப்பாளர் பங்கு முக்கியமானது. அதை உணர்ந்து உழைத்திருக்கிறார் தினேஷ் காந்தி.
முதல்பாகம் மற்றும் மூன்றாம் பாகங்களில் என்ன நடக்கப்போகிறது என்பதற்கான அடையாளங்கள் படத்தில் இருக்கிறது. அதை எப்படி எடுக்கப்போகிறார்கள் எப்படி ரசிகர்களை ஈர்க்கப்போகிறார்கள் என்பது எழுத்து இயக்க வினோவின் கைகளில் இருக்கிறது.




