இயக்குநர் பிரபு சாலமன் படம் என்றால் கட்டாயம் மலைப்பாதை பயணம் ,தம்பி ராமையா ,பஸ் ஆகியவை இருக்கும். இது அவரது நம்பிக்கை. படமும் தப்பு பண்ணியதில்லை. செம்பியும் சேம் பிளட் !
கோடைக்கானல் பழங்குடி மக்களை சேர்ந்த வீராயி. கோவை சரளா மிகச் சரியான தேர்வு. இன்னும் சரியான தேர்வு நிலா.,சிறுமி செம்பியாக நடித்திருப்பவர்.எதிர்க்கட்சித் தலைவர் நாஞ்சில் சம்பத்தின் மகன் உள்ளிட்ட மூவர் சுற்றுலா வந்த இடத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விடுகிறார்கள்.
விளைவு ?
ஆளும்கட்சிக்கு இல்லாத சப்போர்ட் அதிகார வட்டத்திலிருந்து எதிர்க்கட்சித் தலைவர்க்கு கிடைக்கிறது. காரணம் கருத்துக்கணிப்பில் அடுத்து ஆட்சியைப்பிடிப்பது நாஞ்சில் சம்பத் என்று வருவதால்.! அதிகார வட்டத்தின் நடப்பு அரசியலை சொன்ன பிரபு சாலமனின் தைரியம் பாராட்டத்தக்கது. இன்ஸ்பெக்டர் வழியாக அதை அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.அழகான நச்சுப்பாம்பு காவல்துறை !
லஞ்சம் கொடுக்கவந்த இன்ஸ்பெக்டரை வீராயி தாக்கிய பின்னர் கதையின் வேகம் இன்னும் அதிகமாகிறது.என்ன நடக்கிறது எப்படி முடிகிறது என்பதுதான் படம்.
சில படங்களில் எரிச்சலூட்டும் காமெடியை காட்டிய கோவை சரளாவா இது என்று மிரட்டலான நடிப்பினை வியப்பூட்டும் தோற்றத்தில் காட்டிவிட்டார். விருதுக்குரிய நடிப்பு. வாழ்த்துவோம் கோவை சரளாவை.!
அம்மாச்சி என்று பாசமுடன் அழைக்கும் சிறுமி நிலா பாவப்பட்ட உணர்வுகளை துல்லியமாக உணர்த்துகிறார். சிறுமிக்கும் வாய்ப்பு இருக்கிறது விருது பெறுவதற்கு.!
அலட்டல் அஸ்வின் என்று கெட்ட பெயரை பெற்றெடுத்த அஸ்வினா இது என்று சொல்லுமளவுக்கு நடிப்பில் சிறந்த மாற்றம்.
பழ .கருப்பையா ,நாஞ்சில் சம்பத் , கு,ஞானசம்பந்தம் தம்பி ராமையா ,போலீஸ் ரவி ( பஸ்சில் வீரம் பேசியவர்.)உள்பட மற்ற நடிகர்கள் எல்லோருமே பாராட்டும்படியாக நடித்திருக்கிறார்கள்.
ஜீவனின் ஒளிப்பதிவு கோடைக்கானலின் இயற்கையை அப்படியே பிரதி எடுத்திருக்கிறது.இத்துணை அழகான இடங்கள் நம்ம கொடைக்கானலில் இருக்கிறதா?
பஸ் பயணத்தில் அவ்வப்போது பொங்குகிற மப்டி போலீஸ் ரவி செல்போன் வைத்திருந்தும் மேலதிகாரிகளுக்கு தகவல் சொல்லவில்லையே ஏன்?சற்று தெளிவில்லாமல் இருக்கிறது.
போக்சோ சட்டம் குறித்துக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவை.
அதிகார பலம் பணபலம் ஆகியவைகளை களமாடும் மிகச்சாமானிய மனிதர்களின் ஒருங்கிணைவு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.