பேஸ்புக்கில் பொய்யான கணக்கு வழியாக தொடரும் விவகாரம் வெளிநாடு வரை நீண்டிருக்கிறது., மையக் கருத்தான காதலை வலியுடன் சொல்லியிருக்கிறார்கள் .
ஏஆர் முருகதாஸின் கதை, இயக்கியிருப்பவர் எம்.சரவணன்..இருவரும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.
ஆன் லைன் பத்திரிகையில் செய்தியாளராக இருக்கிறார் தையல்நாயகி .(திரிஷா.) “கிசு கிசு எழுதி நாலு காசு பார்ப்பதெல்லாம் ரிப்போர்ட்டர் வேலையா.? புலனாய்வு செய்து புழுதியை கிளப்ப வேணாமா ?”என்று திமிரான உடல் மொழியுடன் அதிகார வர்க்கத்துக்கு எதிராக அடங்க மறுக்கும் கேரக்டரில் திரிஷா கில்லாடி. “அர்த்த ராத்திரி !ஆளும் அம்சமா இருக்கிறே ,நானே உன்னை ரேப் பண்ணிடுவேன் “என்கிற ரீதியில் புல்லட்டில் வந்தவரை மிரட்டும் காவல்துறை அதிகாரியை , செவிட்டில் அறையாத குறையாக பதில் சொல்லுகிற திரிஷா….. முற்பாதியில் வெகுவாகவே ரசிக்கிறோம் .!திமிர் ,தெனாவெட்டு,போடா சாட்டான் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.இப்படி ரசிக்க பல இடங்களில் வசனங்களும் துணையாக இருக்கின்றன.
ஆனால் ஒற்றை ஆளாக புல்லட் மழைக்கு தப்பி ஸ்டண்ட் வேலைகளை செய்ய வைத்திருப்பது திரிஷாவை உயர்த்திப்பிடிக்கிற வேலை. தீவிரவாதிகளுக்கும் அரசு படையினருக்கும் இடையில் நடக்கிற தானியங்கி துப்பாக்கி சண்டையில் கையில் ஆயுதமின்றி ஆட்களை பந்தாடுவது திரிஷாவுக்கு சாத்தியமா டைரக்டர்!? பறந்து பல்டி அடிப்பதெல்லாம் உங்களின் கற்பனையில் உதித்த குறைப் பிரவச குழந்தைகள்.!
துருத்திய பற்களினால் தாழ்வு மனப்பான்மைக்கு சென்று விட்ட ஒரு பருவப்பெண்ணின் எக்ஸ்ட்ரீம் செயல்பாடுகளை பேஸ்புக் வழியாக சொல்லியிருப்பதும் ,அதை எப்படி தீவிரவாதியின் மனசுக்குள் மத்தாப்பாக பூக்க வைப்பது என்பதையும் இயக்குநர் சரவணன் ரசித்து செய்திருக்கிறார்.
வளம் கொழிக்கும் நாடுகளை சுரண்டுகிற சட்டாம்பிள்ளை நாடுகளை இனம் காட்டியிருக்கிறார்கள். அதற்கு இறையாகிற ஒன்றிய அரசின் அமைச்சரின் முடிவு பரிதாபம்.
கொள்கை வழி நிற்கிற தீவிரவாதிக்கு காதல் வராதா ?ஆலிம் கேரக்டர் அருமை. சுஸ்மிதாவாக வருகிற அனஸ்வரா ராஜன் வெகு இயல்பாக நடித்திருக்கிறார்.எதற்காக தன்னை அத்தை திரிஷா இப்படியெல்லாம் செய்ய வைக்கிறார் என்பது புரியாமல் தலையாட்டுவது ,செய்து முடிப்பது எல்லாமே ரசனை !
துனிஷியா நாட்டின் மணல் மலைகள் முகடுகள் வழியே பயணிக்கிற சக்திவேலின் கேமரா மற்றொரு தீவிரவாதியாக மாறியிருக்கிறது.
படத்தில் தேவையற்ற திணிப்புகள் இருக்கின்றன.. கபிலன் வரிகளில் ‘பனித்துளி’ பாடல் தேவையற்ற திணிப்பு . ஆனால் அதை காட்சிப் படுத்தியிருப்பது அருமை.
துனிஷியா நாட்டின் மணல் மலைகள் முகடுகள் வழியே பயணிக்கிற சக்திவேலின் கேமரா மற்றொரு தீவிரவாதியாக மாறியிருக்கிறது.
‘‘எல்லா நாட்டிலும் ஆண்களுக்கு நல்லா லவ் பண்ண தெரியுது.ஆனா அத தொடர்ச்சியா பண்ண தெரியல’, “‘என்று திரிஷா சொல்லுவதில் இருப்பது ஏக்கமா,வலியா ?” “பொம்பளைய கதற வைக்க ஆம்பளையா இருந்தா போதாது அதுக்கு மேலேயும் இருக்கணும் கீழேயும் இருக்கணும் “என்பது எப்படியோ தப்பியிருக்கிறது.சென்சார் பல இடங்களில் வேட்டை நடத்தியிருக்கிறது.
“‘8 கோடி மக்களை ஒரு பெண்ணால கண்ட்ரோல் பண்ணி வைக்க முடிஞ்சது’ என்கிற வசனத்தில் ஜெயலலிதா தெரிகிறார். .
‘”எனது நாட்டில் வளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் நானும் என் நாட்டுத் தலைவரும் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்’ என்கிற வசனம் கடாபியை குறிக்கிறதா அல்லது …?
ஆலிமை நினைத்து கடைசியில் திரிஷா ஓஓஓவென கத்துவது காதலின் ஒலியென நினைக்கிறேன் .
மொத்தத்தில் ராங்கியாக திரிஷாவை முன்னிறுத்தியிருக்கிறார்கள் ,பிழைகளுடன்.!