சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் அருண்விஜய் ஓட்டிச் சென்ற கார் போலீஸ் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் அருண்விஜய் குடிபோதையில் கார் ஓட்டியதாக தெரியவந்தது என கூறப்படுகிறது.. மேலும் அருண் விஜய் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் நேற்று நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் விஜயகுமாரின் மகனான, நடிகர் அருண் விஜய் நள்ளிரவில் வீடு திரும்பினார்.அப்போது, தனது சொகுசு காரில் அதிவேகமாக வந்த அவர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் எதிரே நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தில் மோதியதாக கூறப்படுகிறது. காரில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால் அருண் விஜய் காயங்கள் இன்றி தப்பினார்.
நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் நடிகர் விஜயகுமார் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் வந்தார். அதைத் தொடர்ந்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் அருண் விஜய் மீது, மோட்டார் வாகனச் சட்டம்- 185-வது பிரிவு மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 279-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர். அருண் விஜய்யிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.