கிராமத்துத் தேவதையின் பெயரைச்சொல்லி நூற்றாண்டு காலமாக பெண்ணடிமைத் தனத்தை கொண்டு செல்லும் ஒரு குக்கிராமத்துக்கதை..
தமிழ்நாடு முழுமைக்குமே பொருந்தும்.ஆனாலும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து எடுத்திருக்கிறார்கள்.
அயலி …கிராமத்துக்கு குக்கிராமம் .சடங்கான பெண்கள் போகக்கூடாது.மீறிப் போனால் கிராமத்தில் பஞ்சம் ,தீ விபத்து,நோய்கள் ,குறிப்பாக பெரியம்மை ஆகியவை பாயும். இதனால் சடங்கானதுமே பெண்களுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்கள்.இதனால் அந்த கிராமத்தில் எந்த பெண்ணும் எஸ்.எஸ்.எல்.சி போகவில்லை.
ஆனால் தமிழ் என்கிற அந்தப்பெண்ணுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்கிற ஆசை. ருது ஆகிவிட்டால் பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள் .அதனால் என்ன செய்கிறாள் அவள்?
ருதுவானதை மறைத்து பள்ளிக்கூடம் செல்கிறாள்.சிவப்பு மையை அவள் பயன்படுத்தும் தந்திரம் தொடக்கத்தில் உதவியாக இருப்பதும் ,அம்மாவின் கடுமையான சந்தேகம் அச்சுறுத்தினாலும் கடைசியில் அயலி கோவில் முன்பாக அவள் உண்மையை சொல்லுவதும் மறக்க முடியாத காட்சிகள்.
கண்டு பிடித்தார்களா ,தமிழ்ச்செல்வி டாக்டர் ஆனாளா ,அவளுக்கு என்னென்ன தடைகள் ,தண்டனைகள் என்பதை சமூக அக்கறையுடன் இயக்குநர் முத்துக்குமார் கட்டமைத்திருக்கிறார்.எட்டு எபிசோடுகளும் முத்திரைகளை தாங்கி இருக்கின்றன.கடைசி இரண்டு எபிசோடுகள் மட்டும் அவசரமாக பிரசவித்துள்ளன.
தமிழ்ச்செல்வியாக தாங்கிப்பிடித்தருக்கும் நடிகை அபி நட்சத்திரா . குண்டு கண்களில் விரிகிற துள்ளல் ,மகிழ்ச்சி,பயம்,கோபம் எல்லாமே இயல்பானது. பழகிய பெண் போல அந்த கேரக்டரை வாழவைத்திருக்கிறார்.
“உங்க குடும்ப கவுரவத்தை ஏன் எங்க காலுக்கு இடையில தேடுறீங்க?”-ஆண் சமூகத்துக்கு சரியான சவுக்கடியை கொடுக்கிறாள் தமிழ்.!
தந்தை பெரியாரின் புத்திமதியும் நல்லவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.”உன் அறிவுக்கு எது சரின்னு படுதோ அதைச்செய் “அறம் கதையில் பேசப்பட்டிருக்கிறது.
அந்த குக்கிராமம் பயத்துக்குப் பழகிப் போனதால் முரட்டுத்தன்மையுடன் மூடப்பழக்கத்தை தங்களுக்கு ஆதரவாக சிலர் பயன்படுத்துவதை இயக்குநர் சரியான கேரக்டர்களை வைத்துச் சொல்லியிருக்கிறார்.
அம்மாவாக வருகிற அனுமோல், தமிழின் அப்பாவாக வருகிற அருவி மதன்,உதவித்தலைமை ஆசிரியராக வந்து வில்லத்தனத்துக்கு தலைமை தாங்கிய தர்மராஜ், ஈஸ்வரி ,லவ்லின் அனைவருமே சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
சிங்கம் புலி அசட்டுத்தனமான ஊர்ப்பெரிசு.மெயின் வில்லனின் அப்பன்.!
ராம்ஜியின் ஒளிப்பதிவும் ,ரேவாவின் இசையும் கதையின் காவலர்கள்.!
அயலியை எப்படியாவது பார்த்து விடுங்கள் என்று சினிமா முரசம் பரிந்துரைக்கிறது.