அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ‘வசந்த முல்லை’. இதில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி நடித்திருக்கிறார். நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ‘நேரம்’, ‘பிரேமம்’ படப் புகழ் ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ரா‘ஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹாவும், எஸ். ஆர். டி. எண்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராம் தல்லூரியும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தயாரிப்பாளர்கள் ரேஷ்மி சிம்ஹா, ராம் தல்லூரி, இயக்குநர் ரமணன் புருஷோத்தமா, இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன், கூடுதல் திரைக்கதை வசனம் எழுதிய பொன்னிவளவன், நடிகர்கள் மணிகண்ட பிரபு, சரத் ரவி மற்றும் படத்தின் நாயகன் சிம்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நாயகன் சிம்ஹா பேசுகையில், ” சில ஆண்டுகளுக்குப் பிறகு ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் சந்திக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. கடந்த ஆண்டு ‘மகான்’ திரைப்படம், டிஜிட்டல் தளத்தில் வெளியானது. இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று ‘வசந்த முல்லை’ வெளியாகிறது. தற்போது கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருக்கிறேன். இனி வலிமையான கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என தீர்மானித்திருக்கிறேன்.
பத்திரிக்கையாளர்களின் கரங்களின் மூலம் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதை பெருமிதமாக கருதுகிறேன். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குனர் ரமணன் புருஷோத்தமாவை முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு சந்தித்தேன். அதன் பிறகு அவர் 2014ஆம் ஆண்டு முதல் எனக்காக ஒரு கதையினை தயார் செய்து, இணைந்து பணியாற்றலாமா..! என செய்தி அனுப்பியிருந்தது தெரிய வந்தது. அவரிடம், ‘முதல் படைப்பாக இதனை உருவாக்க வேண்டும் என்றளவில் ஏதேனும் கதைகள் இருக்கிறதா?’ என்று கேட்டேன். ஒரே ஒரு வாக்கியத்தில் ‘வசந்த முல்லை’ படத்தின் கதையை சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது. உடனடியாக தயாரிப்பாளர் ராம் தல்லூரியைத் தொடர்பு கொண்டு கதையும், கதை சுருக்கத்தையும் விவரித்தேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. அதே தருணத்தில் ரேஷ்மிக்கும் இந்த கதை பிடித்திருந்தது.
பின்னர் படத்தின் திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினோம். மிகவும் அழுத்தமான திரைக்கதை. படம் தொடங்கி 20 நிமிடத்திற்கு பிறகு ஒரு காட்சியை காணத் தவறினாலும், குழப்பம் ஏற்படலாம். ஏனெனில் இந்த திரைப்படம் ஒரு புதுவித பரிட்சார்த்தமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது.
ஒரே இரவில் நடைபெறும் கதை என்பதால், மூணாறு போன்ற மலை பிரதேசத்தில் நேரடியாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் படப்பிடிப்பை நடத்தலாம் என திட்டமிட்டோம். ஆனால் காட்சிப்படி இரவு முழுதும் மழையில் நனைந்து கொண்டிருக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதனால், சென்னையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அரங்கம் அமைத்த பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டதால்… அரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த இயலாத சூழல் உருவானது. பிறகு மீண்டும் அரங்கத்தை மறுசீரமைப்பு செய்து படப்பிடிப்பு நடத்தினோம். இதனால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
முன்னதாக உயிர் நீத்த பிரபல பின்னணி பாடகி ‘பத்ம பூஷன்’ வாணி ஜெயராம் மற்றும் இயக்குநரும், நடிகருமான டி.பி. கஜேந்திரன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.