நடிகர்,இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான, ‘ரன் பேபி ரன்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இந்நிகழ்வில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது,”இந்த படம் எடுப்பதற்கும், திட்டமிட்டபடி வெளியிட்டதற்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகப்போகிறது. பல முன்னணி திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் ஓடுகிறது. இந்த வாரம் வெளியாகும் படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்கான திரைகள் அதிகமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படம் தொடங்கும்போது திரில்லர் படத்திற்கு திரையரங்கில் வரவேற்பு இருக்குமா? ஓடிடி தளங்கள் இருக்கும்போது, திரையரங்கில் மக்கள் வரவேற்பார்களா? என்ற தயக்கம் இருந்தது. ஆனால், நினைத்ததைவிட படம் வெற்றியடைந்திருக்கிறது.
சிறு வயதில் பேட்மின்டன் சேர்ந்தேன். படிப்படியாக முன்னேறி அந்த கோச்சிங் மையத்திலேயே நான் தான் வெற்றியாளனாக இருந்தேன். சிறிது காலம் சென்றதும், வெளியில் சென்றால்தான் அடுத்த நிலைக்கு உயர முடியும் என்று அந்த மையத்தில் இருந்து வெளியேறினேன். அப்போது என்னுடைய கோச் மிகவும் வருத்தமடைந்தார். ஆனால், சில வருடங்களுக்குப் பிறகு நீ அன்று எடுத்த முடிவு தான் சிறந்தது. அதற்கு மேல் உனக்கு கற்றுக் கொடுக்க எதுவுமில்லை .
அதுபோல் சினிமாவில் அடுத்த நிலைக்கு செல்வதற்கு, நான் இதற்கு முன் எடுத்த மூன்று படங்கள் போல் அடுத்தடுத்த படங்கள் இருக்கக் கூடாது என்று தான் இப்படத்தில் நடிக்க முடிவு செய்தேன். இப்படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக சண்டைக் காட்சிகளைப் பார்த்து யதார்த்தமாக இருக்கிறது என்று பாராட்டினார்கள் என்றார்.