தமிழ்த்திரையுலகில் தற்போது பெரும்பாலான திரைப்படங்களின் திரைக்கதைகள் அனுபவம் வாய்ந்த திரைக்கதை எழுத்தாளர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, தோல்வி அடையும் திரைப்படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம்.
. திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், ஒரு புதிய முயற்சியாக பிரபல பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர்,மதன் கார்க்கி மற்றும் படத் தயாரிப்பாளர். தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து இந்தியாவிலேயே முதன்முறையாக, “ஸ்கிரிப்டிக்” என்ற பெயரில் திரைக்கதை வங்கியை தொடங்கியுள்ளனர்.இந்த திரைக்கதை வங்கியை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தொடங்கி வைத்துள்ளார்.
ஸ்கிரிப்டிக்-இன் தொடக்கம் குறித்து கருத்து தெரிவித்த இணை நிறுவனர் மதன் கார்க்கி, “கோ. தனஞ்ஜெயனுடன் இணைந்து இந்த புதிய முயற்சியை தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். காலத்தின் தேவையாக இது உள்ளது. திரைப்படமாகவோ வலைத்தொடராகவோ உருவாக்கப்படும் கதைகள், வலுவானவையாகவும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையிலும் இருக்க வேண்டும். புதிய பாதையை உருவாக்கும் இதுபோன்ற திரைக்கதைகளை வழங்க நாங்கள் தொடங்கும் கூட்டு முயற்சி ஸ்கிரிப்டிக் ஆகும். தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த திரைப்படத் துறைக்கும் பயனுள்ளதாக இது இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார்.