‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அடுத்ததாக தயாரித்து இயகியிருக்கும் படம் ‘பகாசூரன்’.
இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர்.
படத்தின் பாடல்களும் டிரைலரும் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பாகசூரன்’ வரும் 17 ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினரும் திரை பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்இயக்குனர் மோகன்ஜி பேசுகையில்,” இயக்குனர் செல்வராகவன் சார் அமைதியானவர் ரொம்ப பேசமாட்டார் என்று இங்கு பேசியவர்கள் சொன்னார்கள். ஆனால் நானும் செல்வா சாரும் நிறைய பேசியிருக்கோம் . படப்பிடிப்பின் இடையே அவருடன் அமர்ந்து அவருடைய அனுபவங்களை கேட்டு தெரிந்துகொண்டிருக்கிறேன். அவரது ‘காதல்கொண்டேன்’ படத்தை பார்த்துதான் எனக்கு இயக்குனராகும் ஆசை வந்தது. அதேபோல் நட்டி சாருடைய ‘ஜப்விமெட்’ படம் பார்த்துட்டு அவரை சந்திக்க ஆசைப்பட்டிருக்கேன். ‘பகாசூரன்’ யார் என்பது படம் வந்தபிறகு உங்களுக்கு தெரியும். இது அனைவருக்குமான படம். நான் ஒரு பிரிவினரை எதிர்த்து படம் பண்ணுவதாக சொல்கிறார்கள். அதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை. ப.ரஞ்சித் பட்டியலினத்தவருக்கும் நான் ஓபிசி மக்களுக்குமான படங்களை எடுப்பதாக ஒரு பார்வை இருக்கிறது. சினிமாவில் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. நான் பார்த்த அனுபவித்த விஷயங்களைதான் படமாக எடுக்கிறேன். சமூகத்திற்கு சமநிலையை ஏற்படுத்தும் தேவையான படங்களை தொடர்ந்து நான் பண்ணிக்கொண்டே இருப்பேன்”இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பகாசூரன் படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் கௌதம் அவரது நிறுவனத்தின் லோகோவை நடிகர் ரிச்சர்ட் இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.விழாவில் தயாரிப்பாளர் தேனப்பன், கவிஞர் சினேகன், நடிகர்கள், கூல்சுரேஷ், குட்டி கோபி, சரவண சுப்பையா, சண்டை பயிற்சியாளர் மிரட்டல் செல்வா, டான்ஸ் மாஸ்டர் ஜானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.