கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டாடா படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது.
விழாவில் நாயகன் கவின் கலந்து கொண்டு பேசுகையில், “இப்படம் வெளியாவதற்கு முன் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தேன். அதில், இது என்னுடைய 12 வருட கனவு என தெரிவித்தேன்.
அதை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி.ஒரு சாதாரண மனிதன் தினமும் தன்னை நம்பி, தன் வேலையை நம்பி நேர்மையாக உழைத்தால், ஒருநாள் நாம் நினைக்கும் இடத்திற்கு சென்றிடலாம் என்ற நம்பிக்கையை ஆழமாக மனதில் விதைத்ததற்கு நன்றி.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்லுவார். நாம் தேர்வு செய்து நடிக்கும் ஒரு படம்,நம்மை நம்பி முதலீடு செய்யும் பட தயாரிப்பாளருக்கு நல்லபடியாக லாபம் சேரும் படமாக இருக்கனும்.
இதை மனதில் வைத்தே கதைகளை தேர்வு செய்கிறேன். இந்த படத்தை என் நண்பன் மணிகண்டனுக்கு சமர்ப்பிக்கிறேன். அவன் இப்போது உயிரோடு இல்லை, நான் டிவியில் வரும் பொழுது விசில் அடித்து ரசித்தவன் அவன் தான். அவன் இப்போது இருந்திருந்தால் நிச்சயம் சந்தோஷப்பட்டு இருப்பான். இவ்வாறு அவர் பேசினார்.