தனுஷ், சம்யுக்தா நடிப்பினில், தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியிருக்கும் படம், வாத்தி. இது தனுஷின் முதல் நேரடி தெலுங்கு படம். எப்படி இருக்கிறது?
தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவர் சமுத்திரக்கனி. இவர் அரசியல்வாதிகளின் துணையோடு அரசு பள்ளிகளின் தரத்தை குறைத்து, அதன் வளர்ச்சியை அழித்து, தனியார் பள்ளிகளில் படிப்பதே சிறந்தது எனும் பிம்பத்தை கட்டமைக்க முயற்சிக்கிறார். இதனை சமுத்திரக்கனிக்கு சொந்தமான ஒரு தனியார் பள்ளியில் கணக்கு வாத்தியார் வேலை பார்க்கும் தனுஷ் முறியடிக்கிறார். இது தான் வாத்தி படத்தின் கதை.
கணக்கு வாத்தியார் பாலமுருகனாக நடித்திருக்கும் தனுஷ், நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை! அதேபோல் பயாலஜி டீச்சர், மீனாட்சியாக நடித்திருக்கும் சம்யுக்தாவும் நன்றாகவே நடித்திருக்கிறார். இந்த இருவரிடமிருந்தும் பெரிதாக நடிப்பினை எதிர்பார்க்காத இயக்குனர் திரைக்கதையில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், பல படங்களில் பார்த்த பழைய காட்சிகளை அமைத்திருக்கிறார்.
திரைக்கதையில் அலுத்தமாக சொல்லப்படவேண்டிய பல விஷயங்கள் அலுத்தமின்றி சொல்லப்பட்டுள்ளதால், சலிப்பு ஏற்படுகிறது. கல்வி வியாபாரத்தை தோலுரிக்க வேண்டிய காட்சிகளில் சாதிய பாகுபாட்டினை சொல்ல முற்படுவதால், திரைக்கதையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.
தனுஷ் சமுத்திரக்கனி இருவருக்குமான மோதல் வலுவற்ற நிலையில் இருக்கிறது. இதனால் சுவாரஷ்யம் மிஸ்ஸிங்! கூடவே இவர்கள் மோதல் தொடர்பான காட்சிகளில் உயிரோட்டம் இல்லை. தனுஷ் முன்னேற விடாமல் சமுத்திரக்கனி ஏற்படுத்தும் தடைகள் எல்லாம் பலவீனமான உத்திகள்.
இயக்குநர் பாரதிராஜா, ஹரீஷ் பெரடி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், கென் கருணாஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கான கதாபாத்திரங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை!
வசனங்கள் சில இடங்களில் கைதட்ட வைக்கிறது.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், தனுஷ் எழுதி, ஸ்வேதா மோகன் பாடியுள்ள, ‘வா வாத்தி’ பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். லவ்லி சாங்! ஆனால் பின்னணி இசையில், சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தோலுரிக்க நினைத்த வெங்கி அட்லூரி திரைக்கதையில் சொதப்பியுள்ளார். இருந்தாலும் இந்த பிரச்சனையை சொல்ல முயன்றதற்காக அவரை பாராட்டலாம்!