நட்டி நட்ராஜ், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. தன்னுடைய அண்ணனின் மகள் தற்கொலை தொடர்பாக, ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியுடன் துப்பறிகிறார். அப்போது கல்லூரியில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்த பல திடுக்கிடும் விஷயங்கள் தெரிய வருகிறது. இது தொடர்பாக செல்வராகவனை தேட முடிவு செய்கிறார், நட்டி நட்ராஜ். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், ‘பகாசூரன்’ படத்தின் அமெச்சூர் அட்டெம்ப்ட்!
இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இயக்குநர் மோகன் ஜி சித்தரித்துள்ள கதாபாத்திரத்திற்கு அவர் சற்றும் பொருந்தவில்லை! படம் முழுவதும் அவரது நடிப்பு, கதாபாத்திரத்துடன் ஒன்றவில்லை. என்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம். அதோடு உணர்ச்சி மேலோங்க பாட வேண்டிய ‘என்னப்பன் அல்லவா’ பாடலை கேலிக்கூத்து. பாடல் படமாக்கப்பட்ட விதம், இசை, நடனம் அமைக்கபட்ட விதம் ஒன்றோடொன்று முரண்பட்ட விதமாக இருக்கிறது. இப்பாடலைப் போலவே மன்சூர் அலிகான் பாடல் காட்சியும் அமைந்திருக்கிறது..
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜின் கதாபாத்திரப் படைப்பும் முரணாகவே இருக்கிறது.
இவர்களில் இருந்து வேறுபட்டு சற்றே ஆறுதலை கொடுக்கிறது, செல்வரகாவனின் மகளாக நடித்திருக்கும் தாராக்ஷியின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும்.
டிக்டாக்கில் அவ்வப்போது பிரச்சனையான கருத்துக்களை பேசி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் லயா தர்மராஜ். இவரது உடல் மொழியும் தோரனையும் அவரது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது.
ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் முதலாளியான, கல்லூரியின் தாளாளரை நினைவு படுத்துகிறது, வில்லனாக நடித்திருக்கும் ராதாரவியின் கதாபாத்திரம்.
மற்றபடி இப்படத்தில் நடித்திருக்கும் தேவதர்சினி, பி.எல்.தேனப்பன், கே.ராஜன், கூல் சுரேஷ் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தில் குறை இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற செயல்களை, சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் த்ரில்லராக உருவாக்க நினைத்திருக்கிறார் பகாசூரன் படத்தின் இயக்குநர் மோகன் ஜி. ஆனால் அதை திரைவடிவில் சொல்ல முடியாமல் சொதப்பியிருக்கிறார்.
மற்றபடி படத்தில் குறிப்பிட்டு சொல்லும் படி எதுவும் இல்லை.
யூகிக்கக் கூடிய சொதப்பலான திரைக்கதை அமைப்பு மற்றும் செல்வராகவனின் உணர்ச்சியற்ற நடிப்பும் சேர்ந்த முழுமையற்ற படைப்பு தான் ‘பகாசூரன்’.