அரசியல் விமர்சகர்களை திரைப்பட விழாவுக்கு அழைத்து வந்து பேச வைப்பதால் ஏற்படுகிற சிக்கல்களை டி 3 பட விழா தெளிவாக உணர்த்தி விட்டது.
இயக்குநர் பாலாஜியின் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ள ‘டி3’ படத்தின் திரையீடு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்களுடன் அரசியல் விமர்சகர் எனப்படுகிற முக்தார் அகமது கலந்து கொண்டு பேசினார். பட விழாவுக்கும் ,திரை உலகுக்கும் சற்றும் தொடர்பில்லா கட்சிகளைப்பற்றி பேசி சலசலப்பினை உருவாக்கி விட்டார்.இதனால் முன்னணி பத்திரிகையாளர்கள் அவரை தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை. அவர் விரைவாக தனது பேச்சினை முடித்துக்கொண்டார்.
படத்தின் நாயகன் பிரஜின் பேசும் போது, ” நான் ரொம்ப நாளாக நல்ல பிரேக்கிற்காகக் காத்திருந்தேன். இது மாதிரி ஒரு நல்ல படம் செய்ய வேண்டும் என்று எனக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படம் வந்தது. ஜெயலலிதா இறந்த காலகட்டத்தில் அந்தப் படம் வெளியானதால் நான் எதிர்பார்த்த மாதிரி அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. எனக்குள் நெடுநாளாகவே ஒரு ஆசை இருந்தது. சரியான போலீஸ் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கனவு இருந்தது.ஏனென்றால் எனது தந்தை ,தாய் இரண்டுபேருமே காவல்துறையில் பணியாற்றினார்கள்.
நான் நடித்தால் எனது உடல் தோற்றம் சரியாக இருக்குமா? ஃபிட்டாக ஆகுமா ?யூனிஃபார்ம் போட்டால் பொருத்தமாக இருக்க வேண்டுமே யாரும் பார்த்துச் சிரித்து விடக்கூடாதே என்ற அச்சமும் தயக்கமும் இருந்தது. அந்த நேரத்தில் தான் பாலாஜி வந்தார் , கதை சொன்னார். முதலில் வில்லனாக நடிப்பதற்காகத்தான் என்னிடம் கேட்டார். என் நல்ல நேரம் நான் இதில் கதாநாயகனாக மாறி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
குற்றாலம், தேனி என்று ஒரு நாளில் நடக்கும் கதை.போலீஸ் கதை என்றாலே மாஸ்ஸாக காட்டி
பெரிய ஹீரோக்கள் நடிப்பார்கள். புதிதாக வருபவர்கள் அப்படி நடிப்பதில்லை. அது ஒரு ரிஸ்க்கான விஷயம். ஆனால்
இயக்குநர் பாலாஜி தன் மனதில் என்ன நினைத்தாரோ அதையே படமாக எடுத்துள்ளார். அருமையாக திரைக்கதை அமைத்துள்ளார். ஒரே இரவில் நடக்கும் கதை இது. தமிழ் சினிமாவில் யாரும் இது மாதிரி முயற்சி செய்யவில்லை .பெரிய மாஸ் ஹீரோ படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது .புது படக் குழுவினரின் நல்ல புதிய படைப்புகளுக்கு ஊடகங்கள் என்றும் ஆதரவு தரும்.ஊடகங்களான உங்களை மீறி எதுவும் இல்லை. இருபது ஆண்டு காலத்தில் நான் உணர்ந்த பாடம் இது .நல்ல படத்தை ஊடகங்கள் என்றும் கைவிட்டதில்லை. இந்தப் படம் எனக்குப் பிடித்த படம்.நீங்கள் எழுதும் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் படத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்கும்.இயக்குநருக்கும் இதைத் தயாரித்த பீமாஸ் நிறுவனத்திற்கும் நன்றிகள்” என்றார்.
படத்தில் இயக்குநர் பாலாஜி பேசும்போது ,
“இது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வு .முதலில் வேறொரு கதாநாயகனை வைத்து ஒரு திரைப்படம் ஆரம்பித்தேன் அதைத் தொடர முடியவில்லை. பிறகு D3 என்ற இந்தப் படத்தை ஆரம்பித்தேன். இது ஒரு சீக்வல் கதை. D3க்கு பிறகு D2, D1 படங்கள் தயாராகும்.
இந்தப் படத்திற்கு பிரஜினை நடிக்க வைத்த போது உடன் அறிமுகமான நண்பர், பிரஜின் வேண்டாம் என்றார். இந்தக் கதையைச் சொல்லும் போது பலரும் கதையை நம்ப மாட்டார்கள் .தயாரிப்பை நம்ப மாட்டார்கள்.நமக்கான நடிகர் வருவார் என்று நான் காத்திருந்து தேடினேன். அப்படி வந்தவர் தான் பிரஜின். இதில் ஒரு காட்சி வரும். அதில் நடிப்பதற்கு யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் பிரஜின் ஒப்புக்கொண்டார்.
இது கோவிட் காலத்தில் சிக்கிக் கொண்டது .அந்த இடைவெளியில் பிரஜின் தனது உடலை ஃபிட்டாக மாற்றினார். பிறகு வேறு ஒரு தோற்றத்திற்காகவும் உடலை மாற்றிக்கொண்டார். இந்தப் படத்தில் பல்வேறு போராட்டங்கள் இருந்தன. இன்று படம் எடுப்பதை விட பிறகு உள்ள பிரச்சினைகள் அதிகம். தமிழ் சினிமாவில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று புரிவதற்குள் நீண்ட காலமாகிவிடும்.நமக்கு அறிமுகமாகி வருபவர்கள், நண்பர்களிடம்
அசல் யார் போலியார் என்று அறிந்து கொள்வதே பெரிய சவால்.
முன்பு என்னை வைத்து படம் தொடங்கிய தயாரிப்பாளர் முருகேசன், இங்கே வந்துள்ளார். நிச்சயமாக அந்தப் படமும் வெளியாகும். எனக்கு எப்போதும் சில நண்பர்கள் உடன் இருக்கிறார்கள் .
பீமாஸ் கிரிக்கெட் டீம் என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணம் செய்தார்கள். ரஜீஷ். அருள்ஜோதி, நா. சரவணன் போன்றவர்கள் எப்போதும் எனக்கு நேர் நிலையான நம்பிக்கை அளித்தார்கள்.
முதலில் மூன்றரை மணி நேரமாக இருந்த இந்தப் படத்தை ராஜா முகமது ஒரே வாரத்தில் முதல் பாதியை எடிட் செய்து காட்டிய போது வேறு மாதிரியாக மாறியது. பெரிய நம்பிக்கை ஏற்பட்டது.
அதேபோல் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கடும் உழைப்பாளி. லோ பட்ஜெட்டில் உள்ள விஷயத்தை தனது திறமையின் மூலம் ஹை பட்ஜெட் ஆக மாற்றிக் காட்டுவார்.இந்தப் படம் நிச்சயமாக சுவாரசியமாக இருக்கும்.
வேகம் குறையாமல் விறுவிறுப்பாக இருக்கும்”என்றார்.
நடிகர் ‘ராட்சசன்’ புகழ் சரவணன், தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் , இயக்குநர் நடிகர் சசிகுமார் ஆகியோரும் தங்களின் கருத்துகளை வெளியிட்டனர்.