நடிகர் சங்கத்துக்கு பாதுகாப்பு கேட்டு இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர்சங்கத் தலைவர் நாசர் மனு கொடுத்தார அதன் விபரம் வருமாறு;
அன்புடையீர் வணக்கம்,
27.08.2016 காலை 11.30 மணியளவில் சங்க உறுப்பினர் திரு.வாராகி அவர்கள் சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள நடிகர் சங்க அலுவலகத்திற்கு வந்திருந்தார். சங்க செயற்குழு உறுப்பினரும், டிரஸ்டியுமான திரு.பூச்சி முருகன் அவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் திரு.பிரேம்குமார் அவர்கள், திரு.ஸ்ரீமன் அவர்கள் திரு.உதயா அவர்கள் மற்றும் சங்க சட்ட ஆலோசகர் திரு.கிருஷ்ணாரவீந்திரன் அவர்கள், திரு.வாராகி அவர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ள காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், திரு.வாராகி அவர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் யாரும் இல்லாதபட்சத்தில் நான் பேச விரும்பவில்லை என்று கூறி சென்று விட்டார். ஆனால், சங்கத்தின் நுழைவாயில் எதிரே அனைத்து முன்னேற்பாட்டோடு ஊடகங்களை வரவழைத்து பேட்டி கொடுத்தார்.
இது அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டாமென்றும், நுழைவாயில் எதிரே கூட்டம் கூட வேண்டாம் என்றும் அலுவலக ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கு திரு.வாராகி (99404 44476) மறுத்துவிட்டு, அவருடன் அலுவலகத்திற்கு வெளியே ரவுடிகளை வரவழைத்து கூட்டம் சேர்த்து கொண்டு நிர்வாகத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கோஷம்போட்டு கொண்டு அலுவலக ஊழியர்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசினார். அலுவலக ஊழியர்கள் சத்தம் போட வேண்டாம் என்று கூறியதற்கு, என்னைப்பற்றி உங்களுக்கு தெரியாதென்றும், தான் மிகவும் மோசமானவன் என்றும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.
மேலும், சங்கத்திற்கு என்று சட்டவிதிகள் உள்ளது. சங்கத்தினுடைய மரபு பாரம்பரியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தி சுயவிளம்பரத்திற்காக சங்கத்தின் கொள்கைகளை கேவலமாக்கிவிட்டார். எனவே, அவரை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும், இச்சம்பவத்தால் பயந்து மன உளைச்சலுக்குள்ளாகியிருக்கும் இரு பெண் ஊழியர்கள் உட்பட மற்ற ஊழியர்களுக்கும், சங்க அலுவலகத்திற்கும் பாதுகாப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
தங்கள் அன்புள்ள
M.நாசர்
(தலைவர்)