தலைப்புக்கு நன்றி கங்கை அமரனுக்கு.!
கவுண்டமணி செந்தில் காமடியில் காலம் கடந்தும் “இந்த காரை வச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கா ?”என்கிற கேள்விக்கு இந்த படத்திலாவது விடை கிடைச்சிருக்கா ?
இயக்குநரும் கதாசிரியருமான எஸ்.ஜி.சார்லஸ் என்ன சொல்றார்?
குடிசை மாற்று வாரிய வீடுகளில் வாழக்கூடிய தகுதி ஐஸ்வர்யா லட்சுமிக்கு ! ஒரு நகைக்கடையில் சேல்ஸ் கேர்ள் .அம்மா தீபா,அக்கா லட்சுமி பிரியாவுக்கு வாய் பேசாது.அப்பா படுத்த படுக்கையில் இயற்கை உபாதைகளை போக்குகின்ற வயசாளி , பிளஸ் நோயாளி. அண்ணன் கருணாகரன் கட்டவிழ்த்து விட்ட காளை .
பர்சேஸ் பண்ணிய நகைக்கு குலுக்கல் முறையில் பரிசாக வந்த காருக்கு ஓனரம்மா ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவருக்கு அந்த கார் எப்படி வந்தது, அந்த கார் தனக்கே சேர வேண்டும் என்கிற ஓனர்ஷிப்புடன் கருணாகரன்,இவர்களுக்கிடையில் அந்த காரையும் ,ஐஸ்வர்யாவையும் ஆட்டையைப் போட ஆசைப்படுகிற இன்ஸ்பெக்டர்,சுனில் ரெட்டி, இவர்களை சுற்றி ஓடுகிற கதைதான் சொப்பன சுந்தரி.
கதையில் ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தலையில் சுமத்தப்பட்ட சுமையை சுமக்கும் தகுதி அவருக்கு இருக்கிறதா? இதற்காக உடலளவில் அடிபட்டிருக்கிறார் .பைட் காட்சி இருக்கே! குறை சொல்ல முடியாது .ஆனாலும் சொதப்பலான திரைக்கதை டார்க் காமடியாக மாறமுடியுமா?
அம்மாவாக தீபா .படுக்கையில் கிடக்கும் பொக்கை வாய் புருஷனை தூக்குவதும் பின்னர் தொப்பென போட்டுவிட்டு புலம்புவதும்.ரசிக்க முடியுது.
லட்சுமி பிரியாவை வாய் பேசாமல் வைத்து விட்டார்கள்.அதனால் அந்த கேரக்டர் மீது கருணை சுரக்குமா என்ன?பேசினால் என்ன பேசாவிட்டால் என்ன?
காவல் துறை என்றால் கண்ணியம் இருக்காது என்கிற எண்ணத்தை மக்கள் மத்தியில் அழுத்தமுடன் பதிய வைத்ததில் தமிழ்ச் சினிமாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இந்த சுந்தரிக்கும் அதில் பங்கு இருக்கு.
மைம் கோபி ,சாரா ,கருணாகரன் கச்சிதமாக காசுக்கு வஞ்சனையில்லாமல் வாழ்கிறார்கள்.
சொப்பன சுந்தரி செமத்தியான கட்டையாக இருக்கும் என்று நினைத்தால் நோஞ்சான் சொத்தையை காட்டியிருக்கிறார்கள்.
–-தேவிமணி