HYAGREEVA CINE ARTS பட நிறுவனம் சார்பில் இளையராஜா இசையில் T.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ஸ்ரீ இராமானுஜர். ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து அந்த காலக்கட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் T.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில்,நடிகர் ராதாரவி பேசியதாவது:-“இராமானுஜர் 1027ஆம் ஆண்டு பிறந்தவர். இங்கு ஆத்திகம், நாத்திகம் என்று வெவ்வேறு கருத்துகள் பேசப்படுகிறது. அப்படியெல்லாம் பேசக்கூடாது.
ஏனென்றால் ஆத்திகம் இல்லாமல் நாத்திகம் கிடையாது; நாத்திகம் இல்லாமல் ஆத்திகம் கிடையாது. அந்த காலத்திலேயே சீர்த்திருத்த கருத்துக்களை பேசி எல்லோரையும் சமமாக நினைத்தவர்தான் இராமானுஜர். இந்தப்படத்தில் இராமனுஜராகவே வாழ்ந்திருக்கும் கிருஷ்ணனுக்கு நிச்சயம் விருது கிடைக்கும். இந்தப்படத்தை பார்த்தபோது கிருஷ்ணனை நான் இராமனுஜராகவே பார்த்தேன். நடிப்பு மட்டும் யார் சொல்லியும் வராது. கிருஷ்ணனுக்குள் இரமானுஜர் இருந்ததால்தான் அவரால் நடிக்க முடிந்தது. சீர்த்திருத்தவாதியாக நடிப்பது மிகவும் கஷ்டமானது.
ஒருமுறை எனது தயாரிப்பில் கமல்ஹாசனை நடிக்கவப்பதற்காக அவரது கால்ஷீட் கேட்டு அவரை சந்திக்க சென்றேன். நானும் கமலும் அப்போது நல்ல நண்பர்கள். “உன்னை வச்சு ஒரு படம் எடுக்கணும்” என்று அவரிடம் கேட்டபோது, “இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் படம் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம்” என்றவர், “நான் குளத்தில் போட்ட ஆமை மாதிரி. வாயை திறந்துகொண்டே இருக்கணும். எப்போ குருவி விழுதோ அப்போ வாயை டக்குன்னு மூடிக்கொள்ளனும் “என்றார். கமல் ஏன் அப்படி சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் பெரிய அறிவாளி. இன்றைக்கு சினிமாவில் நடிகர் திலகம் இல்லையென்றாலும் கமல்ஹாசன் இருக்கிறார் என்று திருப்திப்பட்டுக்கொள்ளலாம். இந்தப் படத்தை எல்லோரும் தியேட்டரில் போய் பார்க்கவேண்டும்”இவ்வாறு அவர் பேசினார்