சிவலோக பிராப்தி அடைந்தவர்களின் பெயர்களுக்கு முன்னாள் மரியாதை நிமித்தமாக “தெய்வ திரு “எனப் போடுவார்களே திருமண அழைப்பிதழ்களில்! அதைப்போலவா தெய்வ மச்சான் ?
இப்படி ஒரு சந்தேகம் டைட்டிலை படித்தவுடன் வரத்தான் செய்தது.
ஆனால் இங்கு கனவில் வருகிற சாட்டைக்காரன் சொடுக்கி சொல்லுகிற அருள்வாக்குத்தான் கதையைக் கடத்துகிறது. சாட்டைக்காரனாக ஒரு நாள் கால்ஷீட்டில் வந்து போகிறார் வேல.ராமமூர்த்தி.கவுரவ நடிப்பு.
விமலுக்கு ஏத்த கிராமத்துக்கு கதை. அருமைத் தங்கச்சி அனிதா சம்பத்தின் திருமணம் நடை பெறாமல் தட்டித் தட்டிப் போகிறது. கடைசியில் ஒரு மச்சான் மாட்டுகிறான்.தடைகள் உடைபடுகின்றன.களம் வசதியானது. விளையாடியிருக்கலாம்..ஆனால் சொதப்பலான திரைக்கதையினால் தள்ளாடுகிறது.
நெடிய இடைவெளிக்குப் பின்னர் விமல். துணைக்கு பால .சரவணன்.சில இடங்களில் சிரிப்பு .பல இடங்களில் கடுப்பு.
விமலுக்கு ஜோடியாக வருகிறார் நேகா ஜா .இவருக்கு அளந்து வைத்து சீன் வைத்திருக்கிறார்கள்.அஞ்சு சீன் வந்திருப்பாரா ? இவரை விட மகா பாவம் அனிதா சம்பத் .அரைப் பக்க வசனம் பேசி இருந்தாலே அதிகம்தான்.
மச்சானாக நடித்திருக்கும் வத்சன் வீரமணி திரைக்கதை எழுத்தாளர் என்பதால் காட்சிகளின் தன்மைகளை உணர்ந்து சிரிக்க வைக்கிறார்.
பால சரவணன், பாண்டியராஜன், தீபா சங்கர், ஆடுகளம் நரேன், கிச்சா ரவி உட்பட பலர் இருக்கிறார்கள். விஜய் டி .வி. தீபா சோதனை .அறுப்பு.!
ஒளிப்பதிவாளர் கேமில் ஜே.அலெக்ஸ், இசையமைத்திருக்கும் அஜீஸ், ஆகிய இருவரும் வினையாக இல்லாமல் துணையாக இருப்பது பலம்.
இந்த படத்தின் இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார்.படிக்க வேண்டிய பக்கம் அதிகம்.
–தேவிமணி