
அவர்களில் சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் இன்று காலை சென்னைக்கும், மதுரையைச் சேர்ந்த 4 பேர் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மதுரைக்கும் வந்து சேர்ந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சூடானில் இருந்து மீட்கப்பட்டு வந்தவர்களை, உறவினர்கள், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் மீட்கப்பட்டு வந்தவர்களை, கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுததால், உணர்ச்சிமயமாக இருந்தது.
சூடான் நாட்டில் ராணுவ தளபதிகள் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியில், அங்கு உள்நாட்டு போர் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் சூடான் நாட்டில் சுமார் சுமார் 400 தமிழர்கள் உட்பட 3,000 இந்தியர்கள் வசிக்கின்றனர்.
இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க ஒன்றிய அரசு, “ஆபரேஷன் காவேரி”என்ற பெயரில் மீட்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. சூடானில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரையும், பத்திரமாக மீட்க வேண்டும். அதற்காக ஒன்றிய அரசின், “ஆபரேஷன் காவேரி”மீட்புக் குழுவிற்கு, தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த முதல் குழுவில் 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ராஜசேகரன் செல்வராஜன், திவ்யா ராஜசேகரன், கிருத்திகா கோபாலகிருஷ்ணன், சோபியா மாதவன், சந்தோஷ் குமார் ஆகிய 5 பேர் சென்னைச் சேர்ந்தவர்கள்.
ஜோன்ஸ் திரவியம் ஜேக்கப், ஜென்னி ஜோன்ஸ் திரவியம் ஜேக்கப், ஜோஸ்னா திரவியம் ஜேக்கப், சித்ரூத் ஷீபா ஸோரிஸ் ஆகிய நான்கு பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பேரையும் டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாட்டு அரசு அதிகாரிகள் வரவேற்று, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். மீட்கப்பட்டு வந்தவர்கள், எங்களை உடனடியாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று அதிகாரிகளிடம் வற்புறுத்தினர். இதை அடுத்து தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நேற்று இரவு 11:50 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த விமானத்தில் டிக்கெட் இல்லை. இதை அடுத்து 9 பேரையும் தமிழ்நாடு இல்லத்தில்,இரவு தங்க வைத்தனர்.
அதோடு அதிகாலையில் டெல்லியில் இருந்து சென்னை, மதுரை புறப்படும் விமானங்களில் ஒன்பது பேருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் விமான டிக்கெட்டுகள் முன்பு முன் பதிவு செய்யப்பட்டன. அதன்படி அதிகாலை 5:10 மணிக்கு, டெல்லியில் இருந்து மதுரைக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், மதுரையைச் சேர்ந்த 4 பயணிகளுக்கும், அதிகாலை 5:50 மணிக்கு, டெல்லியில் இருந்து சென்னை புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பேருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டன.
அதன்படி 9 பேரும் டெல்லியில் இருந்து தனித்தனி பயணிகள் விமானங்களில் புறப்பட்டு, மதுரை சென்னை வந்து கொண்டு இருக்கின்றனர். மதுரைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 8:20 மணிக்கு வந்து சேர்ந்தது. அதைப்போல் டெல்லி-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று காலை 8:30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தது.
சென்னை, மதுரை விமான நிலையங்களில் தமிழ்நாடு அரசு சார்பில், மாவட்ட வருவாய் துறை அதிகாரி கந்தசாமி தலைமையில், அரசு அதிகாரிகள் சூடானிலிருந்து மீட்கப்பட்டு வந்த தமிழர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். அதன் பின்பு அவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில், அவரவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படனர்.
சூடானிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு வரும், இவர்களின் வருகையை எதிர்பார்த்து, சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் காத்திருந்தனர். விமானத்தை விட்டு இறங்கி, இவர்கள் வெளியே வந்ததும், கண்ணீர் மல்க ஓடிச் சென்று கட்டி அணைத்து, உணர்ச்சி பொங்க வரவேற்றனர். அவர்களும் கண்ணீர் மல்க தங்கள் குடும்பத்தினரை கட்டிப்பிடித்து அழுதனர்.
அதன் பின்பு அவர்கள் சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக சூடானில் பணியில் இருக்கிறோம். எங்களுக்கு இதுவரையில் இதைப் போன்ற பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக, அந்த நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சனையால், எங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவை சேர்ந்த ஒருவர், அந்தப் பிரச்சனையால் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிர் இழந்த சம்பவத்திற்கு பின்பு, எங்களுக்கு அச்சம், பீதி மேலும் அதிகமாகியது. எனவே நாங்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே, முடங்கிக் கிடந்தோம். இதனால் எங்களுக்கு சரியான உணவுப் பொருட்கள் கூட கிடைக்கவில்லை. ஒரு நாளுக்கு ஒருமுறை சாப்பிடுவதே அரிதாக இருந்தது. குடிநீர் கூட தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்திய அரசு எங்களை மீட்க நடவடிக்கை எடுக்கின்றனர் என்பதை கேள்விப்பட்டு, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். எப்படியும் நாம் பத்திரமாக இந்தியா திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தோம். அதன்படி இந்திய அரசின் ஆபரேஷன் காவேரி திட்டத்தின் படி, நாங்கள் மீட்கப்பட்டு, போர்க்கப்பல், போர் விமானம் மூலம் நேற்று இரவு, டெல்லி வந்து சேர்ந்தோம். டெல்லி விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்று, தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். அதன் பின்பு தமிழ்நாடு அரசு அதிகாரிகளே எங்களுக்கு விமான டிக்கெட் ஏற்பாடு செய்து பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
எங்களை பத்திரமாக சூடானில் இருந்து மீட்டு இந்தியாவிற்கு, அதுவும் எங்கள் சொந்த ஊரான சென்னைக்கு வருவதற்கு உதவி செய்த மத்திய, மாநில அரசுகளுக்கும், பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் மீண்டும் சூடான் திரும்புவோமா என்பது பற்றி, இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் எங்களுடைய பணிகள் அனைத்தும் சூடானில் தான் இருக்கிறது. சூடானில் பிரச்சனை ஓய்ந்து, மீண்டும் அமைதி திரும்பினால், அதன் பின்பு நாங்கள் மீண்டும் சூடான் செல்வது பற்றி முடிவு செய்வோம் என்று கூறினார்.