சென்னை கிண்டியில் புதிய பன்னோக்கு அரசு மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. அதே சமயம் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழ்நாடு முதல்வருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விரு விழாக்களையும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைத்து திறப்பு விழா நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது இந்நிலையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அங்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, குடியரசு தலைவருக்கு கருணாநிதி வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகத்தை பரிசளித்தார்.
பின்னர், சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருவதாக உறுதியளித்துள்ளார். அதன்படி, கிண்டியின் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார். இதற்காக வரும் ஜூன் 5ம் தேதி திரௌபதி முர்மு தமிழகம் வருகிறார்.