அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கவுசல்யா நடராஜன் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘குட் நைட்’படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், நடிகர்கள் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், மணிகண்டன், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாகா, கௌசல்யா நடராஜன், உமா, ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன், கலை இயக்குனர் ஸ்ரீகாந்த், படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், இயக்குநர் விநாயக் சந்திரசேகரன், விநியோகஸ்தர் சக்தி வேலன், கிரியேட்டிவ் புரொடியூசர் எஸ். பி. சக்திவேல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விநியோகஸ்தர் சக்தி வேலன் பேசுகையில், ”
இன்றைய தேதியில் நிறைய தரமான படங்கள் தயாராகி வருகின்றன. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியாக உருவான திரைப்படங்கள், திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்பை எப்படி பெறுகிறது? எவ்வளவு வசூல் செய்கிறது? என்பதனை நினைக்கும் போது அனைவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத பயம் வந்துவிடுகிறது. இது போன்ற சூழலில் தயாரிப்பாளர்களிடம் உங்களது படைப்பை முதலில் டிஜிட்டல் தள விற்பனையை நிறைவு செய்துவிட்டு, அதன் பிறகு திரையரங்க வெளியீடு குறித்து ஆலோசிப்போம் என வழிகாட்டுவேன். ஆனால் ‘குட்நைட்’ படக் குழுவினர் முதல் சந்திப்பிலேயே என்னிடம், ‘நாங்கள் மக்கள் கொண்டாட கூடிய படைப்பை உருவாக்கி இருக்கிறோம்’ என உறுதியாக தெரிவித்தனர். அவர்களின் அந்தப் பேச்சு, நம்பிக்கை, எண்ணம்.. அவர்களை வெற்றியை நோக்கி வழிநடத்தியது.
குட் நைட் படக் குழுவின் ஒட்டுமொத்த நம்பிக்கை, பட வெளியீட்டின் போதும் வெளிப்பட்டு ரசிகர்களிடம் சென்றடைந்தது. பொதுவாக வெற்றி என்பது கொண்டாட கூடியது தான். இந்தத் திரைப்படத்தின் வெற்றியை பன்மடங்கு கொண்டாட வேண்டும். தமிழ் திரையுலகத்திற்கும், தரமான படைப்பை உருவாக்குபவர்களுக்கும், நல்ல திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என காத்திருக்கும் என்னை போன்றவர்களுக்கும் குட் நைட் படக் குழு ஆகச் சிறந்த முன்னுதாரணம்.
தரமான.. மக்கள் ரசிக்கக்கூடிய படைப்பை வழங்கினால், அவர்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்து ரசித்து, திரைப்படத்தை வெற்றி பெற செய்வார்கள் என்ற எண்ணத்தை குட் நைட் படக் குழு மீண்டும் விதைத்திருக்கிறது.
பொதுவாக சில தரமான படங்களை மக்கள் ஓ டி டி எனப்படும் டிஜிட்டல் தளங்களில் தான் கண்டு ரசிப்பார்கள் என்ற எண்ணப்போக்கினை இந்த திரைப்படம் சிதறடித்திருக்கிறது. மெலோ ட்ராமா ஜானரில் தயாரான குட் நைட் திரைப்படம், வெளியான முதல் நாளில் என்ன தொகையை வசூலித்ததோ.. இரண்டாம் நாளில் அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வசூலித்தது. மூன்றாவது நாளில் மும்மடங்கு அதிகமாக வசூலித்தது. இதற்கு சின்ன உதாரணம் சென்னையில் முதல் நாளன்று ஒரே ஒரு காட்சியுடன் மட்டுமே திரையிடப்பட்ட கமலா திரையரங்கில், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் ‘குட் நைட்’ திரைப்படத்திற்கு ஐந்து காட்சிகள் ஒதுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் எந்த அளவிற்கு திரையரங்குகளில் வெற்றி பெற வேண்டும் என கணிக்கப்பட்டதோ.. அதை கடந்து மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள், நாயகனான மணிகண்டனை ‘சின்ன விஜய் சேதுபதி’ என கொண்டாடுகிறார்கள்..” என்றார்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், ” குறட்டை எனும் விசயத்தை பொழுது போக்கு அம்சங்களுடன் சொல்ல இயலும் என இளைஞர் பட்டாளம் விவரித்த கதையை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி .இப்படத்தின் நாயகனான மணிகண்டன் மிக துல்லியமான நடிப்பை வழங்குபவர். படப்பிடிப்பு தளத்தில் அவரின் நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். இந்தி திரை உலகில் நவாசுதீன் சித்திக் என்ற திறமையான கலைஞர் இருக்கிறார். அவரைப் போன்ற திறமையான நடிகர் தான் மணிகண்டன். இவரை கண்டுபிடித்து இப்படத்தில் முதன்மையான வேடத்தில் நடிக்க வைத்த இயக்குநர் விநாயக்கை வாழ்த்துகிறேன். பிரபலமான நடிகராகவும், நட்சத்திர மதிப்புள்ள நடிகராகவும் உயர்வதற்கான அனைத்து தகுதிகளும் மணிகண்டனிடம் இருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ் திரையுலகில் இன்னும் கூடுதலான உயரத்திற்கு செல்வார் என்பது என்னுடைய நம்பிக்கை” இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் மணிகண்டன் பேசுகையில், ” இப்படத்தின் வெற்றி பத்திரிக்கையாளர்களாகிய உங்களின் நேர் நிலையான விமர்சனங்களுக்கு பிறகு தான் தீர்மானிக்கப்பட்டது. நல்ல திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறோம் என்பது மட்டும் மனநிறைவு உண்டாகாது. அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை எந்த வகையில் பெறுகிறது என்பதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. சிறிய முதலீட்டில் உருவான ‘சில்லு கருப்பட்டி’ படத்தை அதன் தரத்தை உணர்ந்து திரையரங்கில் வெளியிட்டு சாதித்தார் விநியோகஸ்தர் சக்திவேலன். அவர் இந்த திரைப்படத்திற்கும் பணியாற்றி வெற்றி பெற வைத்திருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
இயக்குநரை சந்தித்து கதை கேட்டபோது, அவர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் நிறுத்திவிட்டு, இந்த இடத்தில் இந்த இசை இடம் பெறும் என்பார். அதன் பிறகு இசை ஒலித்துக் கொண்டிருக்கும் போதே மீதமுள்ள கதையை விவரிப்பார். பிறகு இசையை நிறுத்திவிட்டு, வேறொரு காட்சியில் இருந்து கதையை சொல்லத் தொடங்குவார். இவர் கதையை புரிந்து கொண்டிருக்கும் விதமும், அதனை தெளிவாக எடுத்துரைக்கும் பாணியும் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கியது.
முதல் பட இயக்குநர் மீதான அழுத்தத்தை அவர் எதிர்கொண்ட விதமும் எனக்கு பிடித்திருந்தது. அதே தருணத்தில் படத்தின் வெற்றிக்காக யார் எந்த கருத்தினை சொன்னாலும், அதில் உள்ள உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அவரிடம் இருந்தது.. இயக்குநரிடம் இருக்கும் இந்த விசயங்கள் அவரை எதிர்காலத்தில் சிறந்த இயக்குநராக உருவாக்கும்.
இப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் சிலர், மணிகண்டனை வைத்து படமெடுக்கிறீர்களே..? தேவையா? என அச்சுறுத்திருக்கிறார்கள். அதற்கு அவர் இந்த கதை மீதும், மணிகண்டன் மீதும், இந்த பட குழுவினர் மீதும் நம்பிக்கை இருக்கிறது என பதிலளித்திருக்கிறார். எனக்கே என் மீது இத்தகைய நம்பிக்கை இல்லாத போது, என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்திற்காக இயக்குநர் விநாயக்குடன் இணைந்து திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறேன். அதன் போதே இப்படத்தின் தொகுப்பாளரான பரத் விக்கிரமனின் பங்களிப்பு இருந்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
எனக்கும், ரமேஷ் திலக்கிற்கும் இருக்கும் நட்பு வித்தியாசமானது. எனக்கு விஜய் சேதுபதி எப்படி ஒரு அண்ணனாக ..வழிகாட்டியாக.. இருக்கிறாரோ.. அதேபோல் தான் ரமேஷ் திலக்கும் என் வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகிறார்” என்றார்.