கிரிஸ்ட் இண்டர்நேசனல் புரடக்சன்ஸ் சார்பில் கே.பிரவிஷ், கே.பிரதீஷ்ஜோஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கடிகார மனிதர்கள்’.இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் திலகம் கே.பாக்யராஜ், இயக்குநர் வி.சி.குகநாதன் இருவரும் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முதலில் படத்தின் முன்னோட்டமும், பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன.இந்த விழாவில் இயக்குநர் வி.சி.குகநாதன் பேசும்போது,
“கலைஞர்கள் அனைவருக்குமே பொதுவானவர்கள். அவர்கள் அரசியல் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது. கலைக்கு மொழி பேதம் கிடையாது. இங்கே யார் வேண்டுமானாலும் வேலைக்கு வரலாம். திறமையைக் காட்டலாம். ஜெயிக்கலாம். நன்றாக இருக்கலாம். தமிழகம் வந்தாரை வாழ வைக்கும். யாரையும் ஏமாற்றாது.
இங்கே நான் ஈழத்தைச் சேர்ந்தவன்.. இந்தப் படத்தின் நடிகரான கிஷோர் கன்னடத்தைச் சேர்ந்தவர். தயாரிப்பாளர் கேரளாவைச் சேர்ந்த மலையாளி.. இயக்குநர் நாயுடு வம்சத்தைச் சேர்ந்த தெலுங்கர்.. இப்படி மொழி, இனம் வேறுபாடில்லாமல் செயல்படும் துறை சினிமா துறை. ஆகவே சினிமாக்காரர்களை எதற்குள்ளும் இழுக்க வேண்டாம்.எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தபோது ‘அவர் மலையாளி’ என்று சிலர் சொன்னார்கள். ஆனால் மக்கள் அப்படி சொல்லவில்லையே.. அவரை புரட்சித் தலைவராக, தெய்வமாக பார்த்தார்கள். அது போலத்தான் அரசியல் தலைவர்களுக்கும் மக்கள் ஜாதி பார்த்து, இனம் பார்த்து தலைவராக்குவதில்லை.கன்னட நடிகர் ராஜ்குமாரை முதன்முதலாக ‘வேட கண்ணப்பன்’ என்கிற கன்னடப் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் நமது தமிழகத்தைச் சேர்ந்த ஏவி.எம். மெய்யப்பச் செட்டியார்தான். ஒரு தமிழன் அறிமுகப்படுத்தியதால்தான் அந்த ராஜ்குமார் கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக ஆக முடிந்தது. ஏவி.எம். செட்டியார் அதைச் செய்யாவிட்டால் ராஜ்குமாரின் நிலைமை இந்நேரம் என்னவாகியிருக்கும்..? ராஜ்குமாரை அப்போதும்கூட ‘கன்னட எம்.ஜி.ஆர்’. என்றுதான் சொன்னார்கள். அப்போதும் அவருக்கென்று ஒரு தனித்துவம் இல்லை. எம்.ஜி.ஆரை போலத்தான் என்றுதான் அழைத்தார்கள்.
இப்போது அங்கேயிருந்துதான் நமக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. காவிரி நீரைத் தரக் கூடாது என்று அங்கேயிருக்கும் கலைஞர்களே சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறு. நீங்கள் கலைஞர்கள். உங்களுக்கு இது தேவையில்லாதது. இது அரசியல் பிரச்சனை. இரு மாநில அரசியல்வாதிகளும் பேசித் தீர்த்துக் கொள்வார்கள். திரைப்பட கலைஞர்கள் அரசியலுக்குள் நுழைந்து பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம்..” இவ்வாறு அவர் கூறினார்.