சென்னையில் இன்று மாலை சென்னை போக்ரோட்டில் உள்ள ரேசிடசி ஓட்டலில் நடந்த நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக செயற்குழு தெரிவித்துள்ளது.இதையடுத்து, ஊழல் புகாரில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கும் வரை இடைநீக்கம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு முன்பாக, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, முன்னாள் நடிகர் சங்க தலைவர் நடிகர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால் சார்பில் செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் புகார் அளித்தார்.அந்த புகார் மனுவில், நடிகர் சங்க அறக்கட்டளையில் அறங்காவலர்களாக சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய மூன்று பேரும் பதவி வகித்தனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்ற பின்னர் பலமுறை கேட்டும், அவர்கள் கணக்கை சமர்ப்பிக்கவில்லை. தணிக்கை செய்யப்பட்டதில், ரூ.1.65 கோடி வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிகிறது. எனவே சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.