இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’.
கௌதம் (ஜெய்), தனது மனைவி வந்தனா (ஷிவதா), மகள் விருத்தி விஷால் (ஆர்த்தி) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். அவர், வேலை காரணமாக வெளியூர் செல்ல நேரிடுகிறது. அப்போது தனது முன்னாள் காதலி ஆரண்யாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) சந்திக்கிறார். இருவரும் ஒன்றாக சில வாரங்களை கழிக்கின்றனர். ஆரண்யா தனது கணவர் பிரகாஷ் (அம்ஜத் கான்) உடன் வாழ்ந்து வரும் கசப்பான வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதோடு, அவர்கள் சேர்ந்திருந்த பழைய நினைவுகளையும் அசை போடப்படுகின்றனர். இந்த சந்திப்பின் போது ஆரண்யாவுக்கு கௌதம் மீது இருந்த பழைய காதால் மீண்டும் அசுரத்தனமாக துளிர் விடுகிறது.
ஆரண்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்), தனது கணவர் பிரகாஷை (அம்ஜத் கான்) விவாகரத்து செய்வதோடு, கௌதமையும் (ஜெய்) விவாகரத்து செய்ய வற்புறுத்தி வருகிறார். அவர் நினைத்தது நடந்ததா? கௌதமின் (ஜெய்), மனைவி வந்தனாவின் (ஷிவதா) நிலைமை என்னவானது? என்பது தான், இந்த தீராக் காதலின் கதை!
படத்தின் முதல் பாதியாக வரும் ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷ் காதல் காட்சிகள், எந்த விதமான தாக்கத்தையோ, உணர்வையோ ஏற்படுத்தவில்லை! இருவரிடையேயான பேச்சுக்கள் அலுப்பினை ஏற்படுத்துகிறது. பலவீனமான காட்சியமைப்புக்கள்.
இரண்டாவது பாதி ஜெய், ஷிவதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மூவருடைய உணர்வு போராட்டங்கள் அதற்கான காட்சியமைப்புகள் அடுத்தடுத்து ரசிக்க வைக்கின்றன. அதோடு மிகச் சரியான க்ளைமாக்ஸூடன் முடித்திருக்கிறார், இயக்குநர் ரோஹின் வெங்கடேசன்.
நடிப்பினை பொறுத்தவரை, ஷிவதா முதலிடத்தை பிடித்து கொள்கிறார். இவருக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெய், மற்றும் அம்ஜத்கான் ஆகியோர் அடுத்தடுத்தாக இடம் பெறுகின்றனர்.
ஜெய்யின் கதாபாத்திரமும், ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரமும் கன்னியத்துடன் படமாக்கப்பட்டிருக்கிறது. வாய்ப்பு கிடைத்தும் தடம் பிறழாத கணவனாக வரும் ஜெய் பெண்களின் மனதில் இடம் பிடித்துவிடுகிறார். அதேபோல் தன்னிலை உணரும் ஐஸ்வர்யா ராஜேஷ் க்ளைமாக்ஸில் நடந்து கொள்ளும் விதமும் சிறப்பு!
காட்சியமைப்புகளுக்கேற்ற ஒளிப்பதிவும் இசையும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
‘தீராக் காதல்’ திரைப்படம் காதலித்து பிரிந்தவர்களுக்கு நல்ல வழிகாட்டி!