மயிலாடுதுறையில் கிபி 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த மிகவும் தொன்மை வாய்ந்த ‘தருமபுரம் ஆதீனத் திருமடம்’ உள்ளது. இந்த ஆதீனத்தில் ஒவ்வொரு வருடமும் குருபூஜைவிழா, பட்டண பிரவேச விழா வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடம் இப்பெருவிழாவின் கொடியேற்றம் கடந்த மே மாதம் 31ஆம் தேதி மடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் நடந்தது.
கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ‘தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்’ முன்னிலையில் திருவிழாவின் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான 6ஆம் நாள் திருக்கல்யாண வைபவமும், 8ஆம் நாள் திருத்தேர் உத்ஸவமும், 10ஆம் நாள் தருமபுரம் ஆதீன கர்த்தர் சிவிகை பல்லக்கில் பட்டண பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வும் நடக்க உள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா மற்றும் விசாகன் தம்பதியர் இன்று தருமை ஆதினம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோச்சடையான் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்..இந்நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையடுத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் நடிகரும், தொழிலதிபருமான விசாகன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வீர் என்று ஒரு மகன் உள்ளான். தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் விரைவில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளார்.
சமீபத்தில் இவர் கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது தனது காரின் மற்றொரு சாவி காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.