சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், அனசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்னா, தன்ராஜ், மீரா ஜாஸ்மின், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பலரது நடிப்பினில் வெளி வந்திருக்கும் படம், விமானம்.
பொதுக் கட்டணக் கழிப்பிடத்தை நடத்தி வருவதன் மூலம், கிடைக்கும் சொற்ப வருவாயை கொண்டு, வாழ்க்கை நடத்தி வருபவர், சமுத்திரக்கனி. இவரது ஒரே மகன், மாஸ்டர் துருவன். படிப்பில் கெட்டிக்காரன். அவனது ஒரே ஆசை விமானம். விமானம் பறப்பதை பார்ப்பதும், அதில் ஏறி பறப்பதற்கும், பெரிதும் ஆசைப் படுபவன்.
சொற்ப வருவாயில், மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தி வரும், சமுத்திரக்கனியின் வாழ்க்கையில் பெரிய சோகம் ஏற்படுகிறது. அதாவது, சமுத்திரக்கனியின் மகனுக்கு கேன்சர். அவன் வாழ்க்கையின் இறுதிகட்டத்தில், இருப்பதாக மருத்துவர்கள் சொல்லி விடுகிறார்கள்.
கழிப்பிடத்தை பயன்படுத்துபவர்கள் தரும் சில்லறை காசில், வாழ்க்கையை நடத்தி வரும் சமுத்திரக்கனி, தனது மகனின் ஆசையை நிறைவேற்ற, அவனை விமானத்தில் அழைத்து செல்ல முடிவெடுக்கிறார். அது நடந்ததா? மகனின் நிலை என்ன ஆனது, என்பதே விமானம்.
சமுத்திரக்கனி, தன் மகன் மீது வைத்திருக்கும் பாசமும், பரிதவிப்பும் செயற்கையாக இருக்கிறது. மீரா ஜாஸ்மினுடனான காட்சியில் மட்டுமே, மனம் கவரும் படி நடித்து உள்ளார்.
மாஸ்டர் துருவன், சிறப்பாக நடித்து இருக்கிறான். விமானம் குறித்து சிறுவர்கள் பேசிக்கொள்ளும் வசனம் இயல்பாக இருக்கிறது.
விபச்சாரம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ள அனசுயா பரத்வாஜின் காட்சிகளை குறைத்து, இலை மறை காயாக காட்சிப்படுத்தி இருக்கலாம். சிறுவனை சுற்றிவரும் கதைக்கு அவ்வளவு நீளமான காட்சிகள் தேவையற்றது.
‘ஆடுகளம்’ முருகதாஸ் நடித்து இருந்த, ‘ராஜா மகள்’ திரைப்படத்தை நினைவு படுத்துகிறது, விமானம்!