சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில்பாலாஜியை வரும் 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, ஜாமின் கேட்டும், காவிரி மருத்துவமனைக்கு மாற்ற கோரியும் உள்ளிட்ட 3 மனுக்களை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன் வாதாடியதாவது: கைது செய்யப்படுவதற்கான சம்மனை, செந்தில்பாலாஜியிடம் வழங்கினோம்.
ஆனால், அவர் பெற மறுத்துவிட்டார். கைது நடவடிக்கையில் சட்ட விதிமீறல் இல்லை. உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
அவருக்கு ஜாமின் தரக்கூடாது.சுதந்திரமான மருத்துவ குழுவை வைத்து செந்தில்பாலாஜி உடல்நிலையை ஆராய வேண்டும்.மருத்துவ குழுவை நீதிமன்றமே நியமிக்கலாம். மேலும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்தார்.
செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ வாதாடுகையில் கூறியதாவது:
விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு துன்புறுத்தப்பட்டார். 3 அடைப்புகள் உள்ளதால், பைபாஸ் அறுவை சிகிச்சையை 2 நாட்களுக்குள் செய்ய வேண்டும். உரிய நேரத்தில் சிகிச்சை செய்யவில்லை என்றால், உயிருக்கு ஆபத்து உள்ளது.
அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும். அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். 22 மணி நேரமாக அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி துன்புறுத்தப்பட்டு உள்ளார்.
செந்தில்பாலாஜி எந்த வழிமுறையையும் பின்பற்றாமல் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால், அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார் என தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்த மனுவின் விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தி.மு.க. வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2015-ம் ஆண்டு நடந்த வழக்கில் திடீரென கைது செய்வதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினோம்.
அமலாக்கத்துறை சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் 41ஏ விதியை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளனர்.
அமலாக்கத்துறையை பொறுத்தவரை தவறு செய்துவிட்டோம் என தற்போது கருதுகின்றனர்.” இவ்வாறு தி.மு.க. வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.