பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரிப்பு மற்றும் ஏ வெங்கடேஷ் இணைதயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘தண்டட்டி’ . இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார்.
இதில் கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது இந்நிகழ்வில் இயக்குநர் ராம் சங்கையா கூறியதாவது;-
“நான் சிம்பு தேவன் உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளேன். இது எனது முதல் படம். என்னுடைய முதல் பதிவே அழுத்தமாக இருக்க வேண்டுமென இந்த கதையைத் தேர்வு செய்தேன். இப்போது கிராமப்புறங்களில் தண்டட்டி அணிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எதிர்காலத்தில் அது முழுவதுமாக இல்லாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இனி வர இருக்கின்ற தலைமுறைக்கு தண்டட்டி என்ற ஒரு சொல் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக இதை எனது முதல் படைப்பாக எடுத்துக் கொண்டேன்.
கிராமத்தில் தண்டட்டி அணிந்த பெண்மணியான ரோகிணி எப்படி வாழ்ந்தார் அவர் இறந்த பிறகு அந்த தண்டட்டி தொலைந்து விடுகிறது அதை கண்டுபிடிப்பதற்காக அந்த ஊர் காவல் நிலைய ஹெட் கான்ஸ்டபிள் ஆன பசுபதி வருகிறார். அந்த தண்டட்டி என்ன ஆனது? யார் எடுத்தது? என்பதை மதுரை மாவட்ட வட்டார வழக்கில் நகைச்சுவை உணர்வுடன் சொல்லியுள்ளேன்.
படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. நடிகர் நடிகைகள் என பத்து பேரைத் தவிர மற்ற அனைவருமே அந்த ஊரைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த பாட்டிகள். அவர்களை நடிக்க வைத்தது சிறப்பாக இருந்தது. இந்த கதைக்கு ரோகிணி பொருத்தமாக இருப்பார் என முன்பே முடிவு செய்து விட்டேன். அதேபோல் போலீஸ் கதாபாத்திரத்திற்கும் பசுபதி பொருத்தமாக இருந்தார். விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி மிகுந்த ஒத்துழைப்புடன் இந்தப் படத்தை எடுத்துக் கொடுத்தார். அதேபோல் ஒரு கிராமத்துப் படம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இசையமைக்காமல் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையில் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி இசையமைத்துக் கொடுத்தார்.அதேபோல் சமீபத்தில் அண்டாவ காணோம் படத்தின் கதையும் இந்த கதையும் ஒரே மாதிரி இருப்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் புகார் தெரிவித்தார்.
நாங்கள் அவருக்கு படத்தைப் போட்டுக் காண்பித்தோம். படத்தைப் பார்த்துவிட்டு அவர் எங்களிடம் என் படம் வேறு… உங்கள் படம் வேறு என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதேபோல் திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் இது என்னுடைய புத்தகத்திலுள்ள சிறு கதை எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
அவர் கடந்த ஆண்டு தான் அந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டார். ஆனால் என்னுடைய தண்டட்டி படத்தின் கதையை 2019 ஆம் ஆண்டே பதிவு செய்து விட்டேன். ஏழு ஆண்டுகளாக இந்தக் கதையை தமிழ்சினிமாவிலுள்ள பலருக்கு சொல்லிவந்திருக்கிறேன்.
ஏழு வருட உழைப்புதான் தண்டட்டி.
இதுபோல் குற்றச்சாட்டுகள் வருவதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஏழு ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு இந்த படம் வெளியாக உள்ளது. இந்த கன்டென்ட் பிடித்ததால் தான் தயாரிப்பாளர் லக்ஷ்மன் இந்த படத்தைத் தயாரித்தார். படம் சென்சார் செய்யப்பட்டு யூ சான்றிழ் பெற்றுள்ளது. இரண்டு மணி நேரம் போடக்கூடிய அளவில் படம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. எந்த வகையிலும் படம் போரடிக்காமல் ரசிகர்களை எங்கேஜ்டாக வைத்திருக்கும் என்றார்.
நடிகர் பசுபதி கூறியதாவது,” சார்பட்டா பரம்பரை’ படத்துக்குப் பிறகு வித்தியாசமான கதைகள் வந்தால் நடிக்கலாம் என இருந்தேன்.
அப்போதுதான் இயக்குநர் ராம் சங்கையா இந்தக் கதையை சொன்னார். எனக்கு மிகவும் பிடித்தது. இதுபோல் லைட் வெயிட் கதைகள் மக்களிடம் அதிகமாக பேசப்படும். எனது கதாபாத்திரம் இதில் திருப்திகரமாக வந்துள்ளது.
படத்தை நான் பார்த்து விட்டேன். எனக்கு மிகவும் பிடித்தது. சமீபகாலமாக இது போன்ற கன்டெண்ட் உள்ள படங்கள் ஜெயிக்கிறது. நான் சம்பளத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. என்னுடைய கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை மட்டும் தான் பார்ப்பேன். அப்படி படங்கள் அமைந்தால் நடிப்பேன். இல்லையென்றால், எனது தோட்டத்தில் விவசாயத்தைக் கவனித்துக் கொண்டு நிம்மதியாக இருந்து விடுவேன் என்றார்.
நடிகை ரோகிணி கூறியதாவது:-“இந்தப் படத்தில் தங்கப் பொண்ணு கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். உண்மையிலேயே அவ்வளவு பெரிய தண்டட்டி அணிந்து நடித்தது சந்தோஷமாக இருந்தது. அந்த ஊரில் ஏராளமான பெண்கள் இந்த தண்டட்டியை அணிந்து உள்ளனர். படத்தில் 60% நான் இறந்த பிறகு நடைபெறும் பிரச்சனைகளைச் சுற்றி காட்சிகள் இருக்கும். பசுபதிக்கும் அற்புதமான கேரக்டர். முதல் பட இயக்குநர் எப்படி வேலை செய்வார் என்று நினைத்தேன். ஆனால் அவர் அந்த ஊர் மக்களோடு மக்களாக இருந்து அந்த ஸ்லாங்கை பேசி அழகாக படத்தை எடுத்தார். இப்போது படத்தைப் பார்க்கும் போது திருப்தியாக உள்ளது. நான் பிணமாக நடிப்பதை பற்றி எல்லாம் கவலைப்பட்டதில்லை. தொடர்ந்து இது போன்ற கேரக்டர்கள் அமைந்தால் என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார்.