இயக்குநர் மாரி செல்வராஜ் தேவையற்ற விவாதத்தை தொடங்கி வைத்தது ஒரு வகையில் மாமன்னன் படத்தின் புரமோஷனுக்கு உதவியாகவே அமைந்திருக்கிறது.
இதற்காக அவர் தேவர் மகன் படத்துக்கும் ,உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும்.
“இசக்கி என்கிற கதாபாத்திரம் தனது மனப்பிறழ்வுக்கு காரணமாக அமைந்திருந்தது.அதன் விளைவாக உருவானவைதான் பரியேறும் பெருமாள் ,கர்ணன் ஆகிய படங்கள்.அந்த வரிசையில் வந்திருப்பதுதான் மாமன்னன்.தனது தந்தையின் கேரக்டர்”என்பதாக சொல்லியிருந்தார் .ஆனால் தேவர் மகனுக்கும் மாமன்னனுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை.!
மாமன்னன் கதை என்ன?சேலம் மாவட்டத்தில் நிகழ்கிற கதை. ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் கட்டுப்பாட்டில் இருக்கிறது அந்த மாவட்டம்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒரு தொகுதியில் 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் மாமன்னன் என்கிற வடிவேலு.இவரது தொகுதிக்குட்பட்ட பெரிய வட்டக் கிணறில் மகன் உள்ளிட்ட 4 சிறுவர்கள் குதித்து விளையாடுகிறார்கள். கோவில் கிணற்றில் ஒடுக்கப்பட்ட சாதி சிறுவர்கள் குதித்து நீந்தலாமா என்கிற வெறியில் அவர்களை உயர்ந்த சாதி முதியவர்கள் சிலர் கல்லால் அடிக்கிறார்கள். மூன்று சிறுவர்கள் இறைவனடி சேர , வடிவேலுவின் மகன் மட்டும் தப்பித்து விடுகிறான்.!
இது முதலாவது அழுத்தம். மகன் அதிவீரன் என்கிற உதயநிதி ஸ்டாலின் தந்தையுடன் பேசுவதை நிறுத்தி விடுகிறார். சுயமரியாதைக்கு எந்த வகையிலும் இழுக்கு வந்து விடக்கூடாது என்பது இவரது அழுத்தமான கொள்கை.இதனால் தந்தையுடன் பிணக்கு.தந்தை ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தும் மாவட்ட செயலாளர் பகத் பாசில் முன்பாக நின்று கொண்டு பேசுவது மகனுக்கு பிடிக்கவில்லை. இந்த கட்டத்தில்தான் உதயநிதியின் உக்கிரம் தீ பிடிக்கிறது. இந்த கட்டத்தை முற்பாதி கதையின் கிளைமாக்ஸ் என்று சொன்னாலும் பிழையில்லை .வடிவேலு ,உதயநிதி ,பகத் பாசில் மூவரும் நானா நீயா என ஒருவரையொருவர் முந்த பார்க்கிறார்கள்.
மூவருமே மனத்தராசிலும் உட்கார்ந்து விடுகிறார்கள்.
கதை இப்படியாக வேகம் பிடிக்கிறது.இந்த மூவரும் சிறந்த நடிகர்கள் என்பதை கதை அடையாளம் காட்டிவிட்டது.
பகத் பாசிலின் அடிமனதில் சாதிய வன்மம் நீரில் கிடக்கிற மஞ்சள் பாஸ்பரஸ் மாதிரி.!அவ்வப்போது தண்ணீரை விட்டு வெளியே வந்து விடுகிறது. விரோதிகளை எரிக்கிறது. பிரமாதமாக நடித்திருக்கிறார்.
இடைவேளைக்குப் பிறகு கதையில் வேகம் குறைந்து விடுகிறது.
கீர்த்தி சுரேஷ் பொதுவுடைமைக்கட்சியை சேர்ந்தவராம்.கதையில் அதற்கான அடையாளமே இல்லையே சாமி.! ஒரு இடத்தில் மார்க்ஸ் படம் இருந்ததாக நினைவு.!
கதையில் வசதியான எம்.எல்.ஏ.வின் மகனாக இருந்தும் உதயநிதிக்கு பன்றி வளர்ப்பு என்கிற அடையாளம் எதற்கு? எதன் குறியீடு?
அம்மா கீதா கைலாசம்,காதலி கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் பன்னிக்குட்டியை கொஞ்சுகிறார்கள்.
ஏஆர் ரகுமானின் பின்னணி இசை வெறும் ஓசையாக இல்லாமல் கதைக்கு நரம்பாக இருக்கிறது. பாடல்கள் ,யுகபாரதியின் வரிகள் மல்லிகைபந்தல் .சுகானுபவம்.
லால் முதல்வராக கச்சிதமாக இருக்கிறார்.எதிர்க்கட்சித்தலைவரான விஜயகுமாருக்கு நாலு வரியாவது வசனம் கொடுத்திருக்கக்கூடாதா? மோசம் யா.!
வசனங்களில் சமூக அக்கறை இருக்கிறது.
-தேவிமணி