பழம்பெரும் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவருமான கே.என்.காளை ( வயது 84)நேற்று நள்ளிரவு திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடல் தகனம் இன்று மாலை 4 மணி அளவில் நடக்கிறது.
நடிகரும், சிறந்த டப்பிங் கலைஞருமான கே.என்.காளை, நடிகர் சங்கத்தில், துணைத் தலைவர்,செயலாளர்,பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். இவரது சொந்தஊர் தஞ்சை மாவட்டம் கோவிலடி. இவரின் சகோதரர் கே.என்.ரத்தினம் நடத்திய நாடசபாவில் பணியாற்றினார்.கடந்த 65 ஆண்டுகளில் சுமார் 10.ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர்,சிவாஜிகணேசன் ஆகியோருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.தேவி என்ற நாடகக்குழுவை சொந்தமாக நடத்தி வந்தார் இவர் சென்னை தேனாம் பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு வசந்தா (வயது 62,)என்ற மனைவியும், ரங்கராஜூ(வயது40) ரகுநாதன் (வயது 42)என்ற மகன்களும் உள்ளனர். இவருக்கு நேற்று நள்ளிரவு திடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.. கே.என்.காளை, கலைமாமணி, மலேசிய நாடகக் காவலர் விருது உள்பட பல விருதுகளை பெற்றஇவர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும்,நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்துள்ள படம் சசிக்குமார் நடிப்பில் வெளியான ‘கிடாரி’ என்பது குறிப்பிடத்தக்கது.அதில் அவர் கிடாரியை யாருன்னு நினைச்ச என் சிஷ்யன்டா என்று பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.சந்திரமுகி படத்தில் ராஜாதிராஜ,ராஜகம்பீர என ஒலிக்கும் பின்னணிக்குரல் இவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கே.என்.காளையின் உடல் சென்னையில் உள்ள அவரது தேனாம் பேட்டை இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. சரத்குமார்,ராதாரவி உள்பட பல திரைத்துறை பிரபலங்கள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். கே.என்.காளையின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது மாலை நான்கு மணியளவில் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு ஐ.ஜி.ஆலுவலகம் பின்புறம் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.