அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, வரும் ஆக. 10-ம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2010-ம் ஆண்டு வரை தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இடையில் சில ஆண்டுகளாக அவர் இமயமலை செல்வதை தவிர்த்துவந்தார். கடந்த 2018-ல் ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் சென்றார்.
அதன்பிறகு கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இமயமலைக்குச் செல்லவில்லை. தற்போது மீண்டும் வரும் ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி இமயமலைக்கு செல்ல இருக்கிறார்.அங்கு ஒரு வாரம் தங்கும் அவர் . பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று வழிபாடு மற்றும் தியானம் மேற்கொள்ள இருக்கிறார்.
இமயமலை செல்லும்போது எப்போதும் , அவரது மகள்கள் இருவரில் ஒருவரை உடன் அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால், இந்த முறை ரஜினிகாந்த் மட்டும் தனியாக இமயமலை செல்ல திட்டமிட்டுள்ளாராம்.அதே சமயம் பாதுகாப்புக்காக உடன் இரண்டு உதவியாளர்கள் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.