காதலர்களை சேர்த்து வைப்பதை தனது லட்சியமாக கொண்டு வாழும் விஜய் சேதுபதி, ஒருமுறை ஹரிஷ் உத்தமனுக்கு நிச்சயமான பெண்ணுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அந்த பெண்ணை தூக்கிச் சென்றுவிடுகிறார். இதனால், ஹரிஷ் உத்தமன், விஜய் சேதுபதியை சமயம் பார்த்து பழிவாங்க நினைக்கிறார்.
இந்நிலையில், விடிந்தால் விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமணம்.. அன்று இரவு டாஸ்மாக்கில் ஹரிஷ் உத்தமன் ஆட்களுக்கும், விஜய் சேதுபதியின் நண்பர் சதிசுக்கும் மோதல் ஏற்படுகிறது . நண்பனை மீட்பதற்காக வரும் விஜய் சேதுபதியிடம் ஹரிஷ் உத்தமன் மதுரையில் உள்ள லட்சுமி மேனனை தூக்கச் சொல்கிறார். அப்படி அந்த வேலையை செய்யாவிட்டால் தங்கையின் திருமணத்தை நடத்தவிடாமல் செய்வேன் என்றும் குடும்பத்தையே அளித்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார்.தங்கையின் திருமணத்தில் பிரச்சினை ஏற்படுவதை விரும்பாத விஜய் சேதுபதி, ஹரிஷ் உத்தமன் சொன்ன வேலையை செய்ய முடிவெடுக்கிறார்.மதுரைக்கு செல்லும் விஜய் சேதுபதி, அங்கிருந்து லட்சுமி மேனனை தூக்கி வந்து ஹரிஷ் உத்தமனிடம் கொடுத்து , தனது தங்கை திருமணத்தை நடத்தினாரா? இல்லையா? மதுரையில் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை. சேதுபதி படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் மற்றொரு மாஸ் படம். இப்படத்தில் ஆக்ஷனில் எல்லாம் விஜய் சேதுபதி அதிரடி காட்டியிருக்கிறார்.லட்சுமிமேனன் வழக்கமான கதாநாயகியாய் வந்து போகிறார் . கே.எஸ்.ரவிக்குமார் மகனை புரிந்துகொண்ட தகப்பனாக அனைவர் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார்..எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடிய கூடிய கிஷோர், இப்படத்திலும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல், கிஷோரின் காதலியாக வரும் சிஜா ரோஸ் நன்றாக நடித்திருக்கிறார்..கபீர் சிங்,. ஹரிஷ் உத்தமன் ஆகியோரை மிரட்டல் வில்லன்களாக காட்டியிருக்கிறார். இயக்குனர் ரத்தின சிவா, சில இடங்களில் கதை மெதுவாக செல்வதால் நமக்கு சோர்வு அயர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.இருந்தாலும், காற்றின் வேகத்தில் றெக்கை பறக்கத் தான் செய்கிறது.