1960 களில் பாண்டிச்சேரியில் வசித்து வரும், ஃப்ரென்ச் வம்சாவளியைச் சேர்ந்த பிரதீப் ராவத், தன்னுடைய பிரமாண்ட பங்களாவில் ஒரு வித்தியாசமான சூதாட்டத்தினை நடத்தி வருகிறார். பணம், விலையுர்ந்த பொருட்களை வைத்து விளையாடி ஜெயிப்பவர்களுக்கு மும்மடங்காகவும், தோற்பவர்களுக்கு மரண தண்டனையும் வழங்கப்படும். அதே போல் விதிகளுக்கு மாறாக நடந்தாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள். இந்த சூதாட்டத்தில் பல மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதனால் ஆத்திரமடையும் மக்கள், பிரதீப் ராவத்தையும் அவரது குடும்பத்தினைரையும் கொல்கிறார்கள். வருடங்கள் பல சென்ற நிலையில் நிர்வகிக்கப்படாத, அந்த பாழடைந்த பங்களா பக்கம் மக்கள் யாரும் செல்வதில்லை.
பாண்டிச்சேரியில் சாராயக்கடை, வட்டி உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருபவர், பெப்சி விஜயன். இவரிடம் இருக்கும் பணத்தை பிபின் – முனீஷ்காந்த் கோஷ்டி கொள்ளையடிக்கிறது. கொள்ளையடித்த அந்தப் பணத்தை, மொட்டை ராஜேந்திரன் கோஷ்டி கொள்ளையடிக்கிறது. இந்தப்பணம் சூழ்நிலை சந்தர்ப்பவசத்தால் சந்தானம் கோஷ்டியிடம் கிடைக்கிறது. இதனால் பணத்தை மீட்க மூன்று கோஷ்டியும் சந்தானத்தை துரத்துகிறது. சந்தானம், பிரதீப் ராவத்தின் பாழடைந்த பங்களாவுக்குள் நுழைகிறார். அப்போது பல வருடங்களாக இயங்காத சூதாட்ட கிளப் இயங்குகிறது. இந்த சூதாட்டத்தினை பேயாக உலாவரும், பிரதீப் ராவத் குடும்பத்தினர் நடத்துகின்றனர். இந்த பங்களாவுக்குள் சிக்கிய 4 கோஷ்டிகளில் எந்த கோஷ்டி உயிர் பிழைத்தது? எனபது தான், ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் கதை.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு சந்தானம், ஒவ்வொரு காட்சியிலும் கல.. கல.. என சிரிக்க வைக்கிறார். இதனால், ரசிகர்களை சிரிக்க வைப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட்ட மொத்த டீமுக்கும் வெற்றி கிடைத்துள்ளது. இந்தப்படத்தை பார்த்தால், எந்த துயரத்தில் இருந்தாலும் சிரித்து விடுவார்கள்.
சந்தானம் உட்பட, மாறன், சேது, முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், பிபின், தீனா, ரெடின் கிங்ஸ்லி, என அனைவருமே டைமிங் காமெடியில் அசத்துகிறார்கள்.
க்ளைமாக்ஸில், பெப்ஸி விஜயன் – மொட்டை ராஜேந்திரன் இருவரும் விலா நோக சிரிக்க வைக்கின்றனர். பேயாக வந்து நியாயம் பேசும் பிரதீப் ராவத், சந்தானத்தின் காதலி சுரபி என, அனைவருமே சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர்.
தீபக் குமார் பதயின் ஒளிப்பதிவும், ரோஹித் ஆப்ரஹாமின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை, சிரிப்பு சரவெடியாக ஓவ்வொரு காட்சிகளும் செல்கிறது. ஆங்காங்கே சிம்பு உள்ளிட்ட பிரபலங்களை நக்கலடித்து செல்வதும் இது அசல் அக்மார்க் சந்தானத்தின் மற்றொரு வெற்றிப் படம் என்பதை உறுதி படுத்துகிறது.
மொத்தத்தில், ‘டிடி ரிட்டன்ஸ்’எல்லோரும் பார்க்கக்கூடிய கலக்கல், காமெடிப்படம்.