அஸ்வின் கக்குமானு சொந்தமாக உணவகம் நடத்தி வருபவர். பவித்ரா மாரிமுத்து, நவீன யுக்திகளை பயண்படுத்தி ஆவிகளுடன் பேசி வருபவர், அது குறித்த ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறார். இருவரும் காதலர்கள். இவர்களின் காதலை எதிர்ப்பவர், இன்ஸ்பெக்டராக இருக்கும் பவித்ரா மாரிமுத்துவின் அண்ணன் கௌரவ் நாராயணன்.
அஸ்வின் கக்குமானு நடத்தி வரும் உணவகத்தில், புதிய டிஷ் ஒன்று மர்மமான முறையில் தினமும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதோடு இரவில் அமானுஷ்யமான விஷயங்கள் சில நடக்கின்றன. இந்த குழப்பத்தில் இருந்து மீள்வதற்குள், அஸ்வின் காக்குமானு சந்திக்கும் நபர்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் இறக்கிறார்கள். இது குறித்து விசாரணையில் இறங்கும் தன்னால் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டது தெரிய வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது, என்பது தான் ‘பீட்சா 3’ படத்தின் கதை.
வழக்கமான சினிமா பாணியில், பேய்ப் படங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அது பரவாயில்லை என்றாலும், உருவாக்கப்பட்ட விதத்தில் சுவாரசியம் இல்லை. அதோடு இடைவேளை வரை குழப்பமான திரைக்கதையாக்கம், ரசிகர்களை சோர்வாக்குகிறது. சரி, பரவாயில்லை. 4 காட்சிகள் நச்சுன்னு பயமுறுத்துற மாதிரி இருக்கிறதா? என்றால், அதுவும் இல்லை. படம் ஆரம்பித்த முதல் காட்சியில் சிறிய ‘மம்மி’ பொம்மையை வைத்து கதை சொல்லுவதில் ஏற்பட்ட குழப்பம் க்ளைமாக்ஸ் வரை இருக்கிறது. ரொம்பவே திணறியிருக்கிறார், இயக்குநர் மோகன் கோவிந்த்.
கதாநாயகன் அஸ்வின் கக்குமானு ஒரு குழப்பமான, சோக மனநிலையில் இருப்பவர் போல் உணர்ந்து நடித்துள்ளார். தன்னால் என்ன முடியுமோ, அதை செய்திருக்கிறார்.
கதையில் பெரும் பங்கு ஆற்ற வேண்டிய பவித்ரா மாரிமுத்து, ஆவிகளுடன் பேசும் ஆப்பினை கண்டுபிடித்ததோடு சரி. மற்ற படி அது கதைக்கோ, திரைக்கதைக்கோ, எந்த விதத்திலும் உதவவில்லை.
அதேபோல், பவித்ரா மாரிமுத்துவின் அண்ணனாக நடித்திருக்கும் கௌரவ் நாராயணனாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. இவரைப்போலவே அனுபமா குமார், அபி நக்ஷத்ரா, கவிதா பாரதி, காளி வெங்கட், வீரா உள்ளிட்டவர்கள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
தன்னை நாசப்படுத்தியவர்களை ப(ழி)லி வாங்குவதை விட்டுவிட்டு, அப்பாவிகளை ஏன் பேய் பலி வாங்குகிறது?
ஆறுதலான விஷயம், ஒளிப்பதிவாளர் பிரபு ராகவின் ஒளிப்பதிவு.
அருண் ராஜின் இசை, கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது!
‘பீட்சா’ முதல் பாகம் கொடுத்த மிரட்டலை, நினைத்து சென்றால் ஏமாற்றமே!