மும்பையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் பிரபுதேவாவிற்கு அல்ட்ரா மாடர்ன் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என ஆசை. ஆனால், பிரபுதேவாவிற்கு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண் தமன்னாவுடன் திருமணம் நடந்து விடுகிறது. தமன்னாவை வேண்டாவெறுப்பாக மும்பைக்கு அழைத்து வரும் பிரபுதேவா. ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து குடியேறுகிறார்.அந்த வீட்டில் நுழைந்ததும் தமன்னாவிடம் தலைகீழ் மாற்றங்கள் நடக்கின்றன..இந்நிலையில், சினிமாவிருது விழா ஒன்றிற்கு பிரபுதேவாவும் தமன்னாவும் போகிறார்கள். அங்கே நடக்கும் பார்ட்டி ஒன்றில் திடீரென மாடர்ன் டிரெஸ்ஸில் தோன்றி, ஸ்டைலிஷ் ஆட்டம் போட்டு அனைவரையும் அதிர வைக்கிறார் தமன்னா. இதில் பிரபுதேவா மிரண்டுபோகிறார். அதோடு, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பிரபல தமிழ் நடிகர் சோனு சூட்டுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் தமன்னாவைத் தேடி வருகிறது.இது பிரபு தேவாவை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.திடீரென தமன்னா இப்படி ஆனது ஏன்? அதன்பிறகு பிரபுதேவா என்ன செய்கிறார்?என்பதை தான் பேய்,காமெடி, சென்டிமென்ட் கலந்து சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார் இயக்குனர் விஜய்.வழக்கமான பேய்ப் படங்களிலிருந்து தனித்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விஷயம்தான் இப்படத்தின் பலமே! பிரபுதேவா, தமன்னாவின் நடனம், காதல், சென்டிமென்ட், நகைச்சுவை ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் ஒரு பொழுதுபோக்கு பேய் படத்தை கொடுத்த இயக்குனர் விஜய்யை தாராளமாகப் பாராட்டலாம். .நடிப்பு, நடனம், காமெடி, பயம் ஆகிய இடங்களில் இயல்பு மீறாமல் நடித்துள்ளார் பிரபுதேவா. ‘சல்மார்’ பாடலில் அவரது நடனம் அட்டகாசம்!உடல்மொழி, முக பாவங்களில் அந்த வித்தியாசத்துக்கு மெருகு சேர்க்கிறார் தமன்னா. நடனத்திலும்,நடிப்பிலும் கைதட்டலை அள்ளுகிறார். நடிகராகவே வரும் சோனு சூட் அந்தக் கதாபாத்திரத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிறார். எல்லோரையும் எளிதில் கவர்ந்து விடும் தேவியை தாராளமாக பார்க்கலாம்!