மலையாளத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான பாப்பன் ப்ரியப்பேட்ட பாப்பன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சித்திக். முதல் படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய, வெற்றிப்பட இயக்குனர்கள் வரிசையில் முக்கிய திட்டத்தை பிடித்தார்
இவர் மலையாளத்தில் இயக்கி பெரும் வரவேற்பை பெற்ற ப்ரெண்ட்ஸ் படத்தை தமிழில் அதே பெயரில், 2001ஆம் ஆண்டு விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி உள்ளிட்டோர் நடிப்பில் ரீமேக் செய்தார். படம் பெரிய ஹிட்டடித்தது.
இதில் வடிவேலு நடித்த காண்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் பல ஆண்டுகள் கடந்தும் உலக அளவில் ட்ரெண்டானது.விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்துக்கு பிறகு கடைசியாக தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தையும், மலையாளத்தில் பிக் பிரதர் படத்தையும் இயக்கினார்.
இந்நிலையில் இயக்குனர் சித்திக்கிற்கு இன்று மாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எக்மோ கருவி துணையுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது