தமிழில் சூது கவ்வும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். தொடர்ந்து பீட்ஸா 2, தெகிடி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக களமிறங்கிய அசோக் செல்வன், ஓ மை கடவுளே, பீட்சா II: வில்லா, தெகிடி , கூட்டத்தில் ஒருத்தன்,போர் தொழில் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் அருண் பாண்டியனின் மகள் நடிகை கீர்த்தி பாண்டியனை நடிகர் அசோக் செல்வன் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இவர்களது திருமணம் வரும் செப்டம்பரில் நடக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
அசோக் செல்வன்,கீர்த்தி பாண்டியன் ஆகியோரது திருமண நிச்சயதார்த்தம் ஏற்கனவே சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்களது திருமணம் நடிகர் அருண் பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ள ரெட்டியார் பட்டியில் நடக்கவுள்ளதாகவும் இதில் இருவரது உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் திருமண வரவேற்பை நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாம்.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் தரப்பில் வெளியாகும் என தெரிகிறது. நடிகர் அருண்பாண்டியனுக்கு கவிதா பாண்டியன், கிரணா பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் என மூன்று மகள்கள் உள்ளனர். இதில், ஏற்கனவே கவிதா பாண்டியன் மற்றும் கிரணா பாண்டியனுக்குத் திருமணம் ஆன நிலையில், கீர்த்தி பாண்டியனைத் தான் அசோக் செல்வன் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அன்பிற்கினியாள், தும்பா படங்களில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியன், தற்போது கண்ணகி எனும் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.