ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடந்தது .இவ்விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் அட்லீ திரையுலகில் தான் கடந்து வந்த பாதை குறித்து சொன்ன குட்டிக்கதை இது தான்,
“குட்டியை பிரசவிக்கும் தருணத்தில் மான் ஒன்று அந்த காட்டில் பிரசவம் செய்வதற்கான சரியான இடத்தை தேர்வு செய்து கொண்டு இருந்தது. ஒரு பக்கம் நீரோடை.. மறுபக்கம் முட்புதர். இதுதான் சரியான இடம் என்று தேர்வு செய்து கொண்டிருந்த கணத்திலேயே அந்த மானுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குட்டி பிறந்துவிடும் என்ற மகிழ்ச்சியிலிருந்த அந்த மானுக்கு திடீரென்று மேகம் கருத்து மழை வரும் என்று அறிகுறி தென்பட்டது. அந்தமானின் வலப்பக்கத்தில் ஒரு புலி, வேட்டையாடுவதற்காக மானை பார்த்துக் கொண்டிருந்தது. புலி நம்மை மட்டுமல்ல நம் குட்டியையும் கடித்து தின்று விடுமே என்ற தவிப்பில் அந்த தாய் மான் இடப்பக்கம் பார்த்தபோது அங்கு ஒரு வேடன் வில்லில் அம்பைப் பொருத்தி வேட்டையாடுவதற்காக குறி பார்த்துக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைத்து கண்ணை மூடியதாம்.
கண்ணை மூடுவதற்கு முன் ஒரு விசயம் நடந்தது. மேகம் கருத்து இடி இடித்து அந்த மரம் எரிந்தது. ஒரு பக்கம் புலி.. மற்றொரு பக்கம் வேடன்.. திரும்பவும் ஒரு இடி இடித்தது. அந்த அதிர்ச்சியில் வேடன் எய்த அம்பு புலி மீது பாய்ந்தது. மழை பெய்து அந்த காட்டுத்தீ அனைந்து விட்டது. உங்களை சுற்றி ஆயிரம் எதிர்நிலை ஆற்றல்கள் இருந்தாலும்… உங்களுடைய கவனம் உங்கள் பணியின் மீது இருந்தால் போதும். வெற்றி நிச்சயம்.
என் வெற்றியின் ரகசியம் என் மனைவி தான். அவர் கொடுக்கும் ஒத்துழைப்பு எதனோடும் ஒப்பிட இயலாது. ” என்றார்.