இன்னும் எத்தனை காலத்துக்கு மேலதிகாரிகளுக்கு சல்யூட் வைத்துக் கொண்டிருப்பது, கையில் இருக்கிற அதிகாரத்தை வைத்துக்கொண்டு லட்சங்களை புரட்டி கோடீஸ்வரனாக மாற வேண்டாமா என்கிற நோக்கத்துடன் வேட்டையாடுகிற ஒரு போலீஸ் அதிகாரி சரத்குமார்.கதையில் இவர் எதிர் நாயகன் .கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்திப் போகிறார்.அந்த முரட்டுத்தனம் எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது? நரி குணம்.!
சிலை திருடும் அமிதாஸ் இவரிடம் மாட்டிக்கொள்ள ,அமிதாசை வைத்துப் பெரும்பொருள் சம்பாதிக்க திட்டமிடுகிறார் சரத். இதுவே ‘பரம்பொருள்’
சோழர் காலத்து புத்தர் சிலை இந்த இருவரிடமும் மாட்டிக் கொள்கிறது .20 கோடி தேறும் . ஆளுக்குப் பாதி. செட்டிலாகிவிடலாம் என்கிற எண்ணம் சரத்துக்கு.! வேலை இல்லாமல் நடுத்தர மக்கள் வாழ்க்கைத் தரத்தில் அல்லாடும் அமிதாஷ் நோய் வயப்பட்ட தங்கையை காப்பாற்றி விடலாம் என்கிற நம்பிக்கையில் போலீஸ் அதிகாரி சரத்தின் கைப் பொம்மையாகிறார் . இருவரது ஆசையும் நிறைவேறியதா என்பதை துடிப்புடன் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சி. அரவிந்தராஜ்.
காதல் ,கச்சடா ஏதாவது இருக்கிறதா ?
கச்சடா இருக்கிறது. சரத்தின் மனைவி ,கணவருடன் வாழப் பிடிக்காமல் விவாக ரத்து வாங்கிக்கொண்டு மகளுடன் வெளிநாடு செல்ல விரும்புகிறார் . அதனால் மனைவியின் முகத்தை காட்ட இயக்குநர்க்கு விருப்பம் இல்லை போலும்.தங்கை காஷ்மிரா பர்தேசி . இவரை அமிதாசுடன் இணைப்பதற்கு ஆசைப்பட்டிருப்பார்கள் போல. நடக்கல .!
சரத் அறிமுகமே மிரள வைக்கிறது. எதிர்த்துப் பேசிவிட்டான் என்பதற்காக அவனை கஞ்சா கேசில் தள்ளுகிற கொடூரன். கதை முழுமையும் சரத்குமார் ஆட்சிதான்.!இவருக்கு இணையாக ஈடு கொடுத்திருக்கிறார் அமிதாஷ். சரத்திடம் தப்பிச் செல்ல முயற்சிப்பதும் அது முடியாமல் விழி பிதுங்கி நிற்பதும் வெகு இயல்பாக இருக்கிறது.
சர்வதேச சிலை கடத்தல் புள்ளிகள் பால கிருஷ்ணன்,வின்சென்ட் அசோகன் , இருவரும் கோர முகத்தினர் என்பது பார்க்கும் போதே தெரிந்து விடுகிறது.
கதை முடிவை நோக்கி செல்லுகையில் நாம் எதிர்பாராத டிவிஸ்ட் .! இயக்குநர் பாலாஜி சக்திவேல் யார் என்பதை அறிகிறபோது பலே பாண்டியா என்று கூவத் தோன்றுகிறது.
எஸ்.பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு ,யுவன் சங்கர் ராஜாவின் இசை இவையிரண்டும் கதையின் தேவை அறிந்து பயன் பட்டிருக்கின்றன.
செல்வம் சேர்க்கிறது பரம்பொருள் !!