‘சந்திர முகி-2’ டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்வில் இயக்குநர் பி வாசு கலந்து கொண்டு பேசுகையில், ” இந்த விழாவிற்கு வருகை தந்து அமராமல் நின்று கொண்டே அயராது உற்சாகம் அளித்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர்கள், நடிகர் -நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்களைத்தான் என்னுடைய குடும்பமாக கருதுகிறேன். இந்த படம் வெற்றி அடையும் போது 50 சதவீதம் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், 50 சதவீதம் நடிகர் நடிகைகளுக்கும் அந்த வெற்றி சேரும்.
என்னிடம் அடிக்கடி வளர்ந்து விட்ட டெக்னாலஜியை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்பார்கள். அதற்கு ஒரே உதாரணம் கூல் சுரேஷ். அவரைப் போன்ற பலரைப் பார்த்து என்னை நான் அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன். அவர் இயக்குநர் இல்லை. இருப்பினும் கஷ்டப்பட்டு முயற்சி செய்து தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்திருக்கிறார். இவரை போன்ற கலைஞர்களை பாராட்டுவது தான் என் போன்றோரின் கடமை.
அதே போல் தான் நான் இயக்குநராக பணியாற்றும்போது ராகவா லாரன்ஸ் என்னிடம், ‘நான் நான்காவது வரிசையில் ஆடிக் கொண்டிருக்கிறேன். ஒரு வரிசை முன்னேறி மூன்றாவது வரிசையில் ஆட மாட்டேனா என ஏங்குகிறேன் சார்’ என்பார். நான்காவது வரிசையிலிருந்து முதல் வரிசையில் ஆடி நடன உதவியாளராகி நடன இயக்குநராகவும் கடின உழைப்பால் உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு என்னுடைய இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியவர். அதன் பிறகு கதாநாயகனாகி.. நல்ல செயல்களை செய்து.. அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். அவருடைய முயற்சியில்.. அவருடைய உழைப்பில்.. இந்த இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறார். தன்னிடம் இருப்பதை மற்றவருக்கு பகிர்ந்து கொடுக்கும் நல்ல மனதுள்ள மனிதர்.
இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் முதலில் ராகவா லாரன்ஸின் நடிப்பை பாராட்டுவீர்கள். அதன் பிறகு கங்கனாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தை பாராட்டுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் பற்றியும் நீங்கள் பேசுவீர்கள். ஏனெனில் அனைவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.
எங்களுக்கு கிடைத்த அருமையான முதலாளி சுபாஸ்கரன். அவரைப் பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்.. அவரால் பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்கிறது. ஆனால் இது எதுவும் தெரியாமல் இருப்பவர்தான் சுபாஸ்கரன். நான் என்னுடைய உதவியாளர்களுக்கும், பணியாற்றுபவர்களுக்கும் இவரைப் பற்றி சொல்வதுண்டு. முதலாளி எங்கேயோ இருந்து.. சம்பாதித்து.. நமக்காக அனுப்புகிறார். அவர் நமக்கு தயாரிப்பாளராக கிடைத்திருப்பது மிகப்பெரிய பாக்கியம். நமக்கு மட்டுமல்ல தமிழ் திரையுலகத்திற்கே மிகப்பெரும் பாக்கியம். அவருடைய நம்பிக்கையை பெற்ற ஒரே நபர் நம் ஜி.கே.எம் தமிழ் குமரன் தான்.
ஆடியோ வெளியிட்டு விழாவில் என் அருகில் அமர்ந்திருந்தார் சுபாஸ்கரன். மாற்றுத்திறனாளி கலைஞர்கள் மேடையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது தமிழ்குமரனை அழைத்து ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார். உடனடியாக அவர்களுக்கு மேடையிலேயே ஒரு கோடி ரூபாய் நன்கொடையை வழங்கியதுடன் மட்டுமல்லாமல் அவர்களுடன் அமர்ந்தார். நல்ல மனிதர். தர்மம் தலைகாக்கும் என்பார்கள் அது இந்த படத்தின் வெற்றியிலும் தெரியும்.
‘சந்திரமுகி’ படம் வெளியாகும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகை தந்து திருப்தியுடன் சென்றீர்களோ… அதேபோல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘சந்திரமுகி 2’ படத்தை காண வாருங்கள். உங்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இன்னொரு விசயத்தையும் இங்கே சொல்ல விரும்புகிறேன். சூப்பர் ஸ்டாருடன் யாரையும் ஒப்பிடாதீர்கள். புரட்சி நடிகர் எம் ஜி ஆர் மட்டும்தான்… நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான்… விஜய், அஜித் என ஒவ்வொருத்தருக்கும் உலக அளவில் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது. அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். அதற்கு உண்டான பலனை மக்கள் அளிக்கிறார்கள். அதேபோல் அதற்கு உண்டான பட்டத்தையும் மக்களே வழங்குவார்கள். அதனால் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி யாரும் பேச வேண்டியதில்லை. அது அவசியமுமில்லை. நன்றி” என்றார்.