நடிகர் இயக்குனர் மாரிமுத்து (வயது 57) இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். சென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியில் குடும்பத்துடன் வசித்து வரும் நடிகர் மாரிமுத்து வுக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், அகிலன் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ என்ற தொலைக்காட்சித் தொடருக்காக தனியார் டப்பிங் ஸ்டுடியோ ஒன்றில் ‘டப்பிங்’ பேசிக் கொண்டிருந்தவர் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பதறிப்போன படக்குழுவினர் உடனடியாக சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்போது மாரிமுத்துவின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை மாலை அவரது இறுதிச்சடங்கு நடத்தப்பட உள்ளது
நடிகர் மாரிமுத்து,ஆரம்பத்தில் கவிஞர் வைரமுத்து விடம் உதவியாளர் மற்றும் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் ராஜ்கிரண் அலுவலகத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது பின்னர் அங்கிருந்து வெளியேறி, பிரபல இயக்குனர்களான மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.மேலும் இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும், 2014-ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களும் கைக்கொடுக்காததையடுத்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம்’ செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவருக்கு பட வாய்ப்புகள் குவிய நடிகராகவே தனது பயணத்தை தொடர்ந்தார். ஜெயிலர், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள மாரிமுத்து இந்தியன்-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.’எதிர் நீச்சல்’ என்ற தொடரில் இவர் பேசிய ‘இந்தாம்மா ஏய்’ என்ற வசனம் பட்டி தொட்டி எங்கும் இவரை பிரபலமாக்கியது .