கனவுக் குகைக்குள்ளிருந்து
கண் முழுதுமாய் திறக்காமலே….
திரைமுன்னோட்டம் காண்கிறேன்- களிப்போடு!
என் பங்களிப்போடு விரைவில் வரப்போகும் நான்கு படங்களை!
1 : மாவீரன் கிட்டு
திரு சுசீந்திரனின் சீரிய இயக்கத்தில்,(உண்மையான/நேர்மையா ன)அரசியல் இயக்கத்தை நடத்தும் ஒரு சிறந்த தலைவனின் பாத்திரத்தில் நான். உடன் விஷ்ணு விஷால்,ஶ்ரீதிவ்யா & சூரி
உண்மை சம்பவத்தை மையமாகக்கொண்டு
உண்மைக்கு அன்மையில் உணர்வுகளை காட்டும் அழுத்தந்திருத்தமான திரைக்காவியம் .
2 : ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’
புதிய தயாரிப்பாளர் திரு ரகு தன் தம்பி
‘கயல்’ சந்திரனை திரைவானில் முழு நிலவாக்க
திட்டம் போட்டு தயாரிக்கிற படம்.
அறிமுக இயக்குனர் சுதர்சன் புதுமையான கதை களத்தில் 51 பவுன் நகை சுவையோடு திரை உலக கோப்பையை கைப்பற்ற திட்டம் போட்டு இயக்குகிற படம். அந்த மைதானத்தில எனக்குன்னு மட்டை இருக்கு . வர்ற பந்தையெல்லாம் அடிச்சி ஆடியிருக்கேன் எத்தனை சதம்னு ரலீஸுக்கு பிறகு ஸ்கோர் போர்டை பாத்தாதான் தெரியும்.
3: குட்டி 32 அடி பாயும் ‘தேனான்டாள் மூவிஸ்’
திரு முரளி தயாரிக்க திரு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’
மார்க்கெட்டில் என்றும் விலை போகும் தங்கமாக ஒரு கதை சொல்லி இயக்குனராக அறிமுகமாகிறார் திரு தளபதி. நான் வரும் காட்சிகளில் எனக்கென ஒரு அஞ்சறைப்பெட்டியை இயக்குனர் திறந்து வைக்க அதிலிருந்து மிளகு சீரகம் பட்டை லவங்கம் எடுத்து மசாலா சமைத்துள்ளேன். ரசிகர்கள் சுவைக்கும் போதுதான் ருசி சரி புரியும்.
ஆனா ஆனா ஆனா ஆனா ஆனா ஆனா …. ஆ னா!
இவ்வருட இறுதியில் (டிசம்பர் 23) வெளியிட முடிவெடுத்து இன்று தினத்தந்தியில் வெளியாகியிருக்கும் விளம்பரம் விளக்கும்
விவரம் யாதெனில் – – –
‘கோடிட்ட இடங்களை நிரப்புக!’
படாடோப படத்தயாரிப்புகளில்
மார்தட்டும் மார்க்கெட்டில் உள்ள கலைஞர்களின்
முக வசீகரத்தை மூலதனமாக வைத்து
மக்களின் எல்லையில்லா எதிர்பார்ப்புகளோடு வெளியாகி வெற்றியாகும் – வெற்றுவாகும் படங்களுக்கு நடுவே ——–
‘கோடிட்ட இடங்களை நிரப்புக!’
கூட்டுத் தயாரிப்பு எனத் துவங்கினேன் ஆனால்
விரல் விட்டு எண்ணிக்கூடியவர்களைத் தவிர,
நட்பு வட்டம் அனைவரும் அன்பை மட்டுமே அள்ளி வழங்கியதால் (இன்னமும் பங்குகள் விற்பனைக்கு உள்ளன. இன்று விளம்பரம் பார்த்து இனி இணைய இயலுமா? என விசாரனை வந்த வண்ணம்)
கிட்டத்தட்ட என் சொந்த பணத்தில் தயாரிக்கும் படம்.
சினிமா மீது எனக்கிருக்கும் காதலை கொண்டாடுவது மட்டுமே என் வாழ்க்கை என்று ஆன பின், என் எல்லாம்( வித்யாசாக் கற்பனை, அயரா உழைப்பு, சேமிக்காத வருமானம், ஆன்ம ஈடுபாடு, என் படத்தை நம்பும் ரசிகர்கள்- அவர்களை நம்பும் என் படைப்பு) இட்டு நிரம்பியுள்ள படம்.
100 sq Cm அளவுள்ள இந்த விளம்பரம் எனக்கு
அளவில்லா மகிழ்ச்சியை விளம்புகிறது .
அந்த மனநிறைவோடு இதை வாசிக்கும் நண்பர்களுக்கும், என்றும் என்னை கைவிடாமல்
நேசிக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!
இப்பதிவை உங்கள் முன் அரங்கேற்றும் வேளையில்
“தமிழ் நாடு theatrical என்ன விலை?” எனக்கேட்ட ஒரு அலைப்பேசி எனக்கு
Hhhaaappppppyyy DIWALI சொன்னது!!!!!!